தனியார் வீடுகளிடம் கட்டணம் கேட்டு மோசடிக் கடிதம்: காவல்துறையில் புகார்

1 mins read
75c6370d-d693-456b-9f5b-0c4523ad41f5
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் கடிதம்போல தயாரிக்கப்பட்டு, தனியார் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போலி கடிதம். - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

தனது பெயரில் போலி கடிதங்களை தனியார் வீடுகளுக்கு மோசடிக்காரர்கள் அனுப்பி இருப்பதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் காவல்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளது.

வீட்டில் வாடகைக்குக் குடியமர்த்துவதற்கான பதிவை அனுமதிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்கு ‘சரிபார்ப்புக் கட்டணம்’ அனுப்புமாறு அந்த மோசடிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 5) கூறியது.

ஆணையத்தின் முத்திரையுடன் அதன் முகவரி மற்றும் இணைய இணைப்பு ஆகியன அந்தக் கடிதத்தில் இடம்பெற்று உள்ளன. பதிவுக் கட்டணப் பிரிவின் தலைவர் என்று ஆண்ட்ரு சியா என்னும் பெயர் குறிப்பிடப்பட்டு அவரது கையொப்பமும் அதில் போடப்பட்டு உள்ளது.

ஆனால், அப்படிப்பட்ட கடிதம் எதனையும் தான் அனுப்பவில்லை என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும், வாடகைக்குத் தங்க வருவோரின் விவரங்களைப் பதிவு செய்யுமாறு வீட்டு உரிமையாளர்களை தான் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அது விளக்கியது.

வீட்டு வாடகைப் பதிவுக்கான பிரிவு எதும் இல்லை என்றும் ஆணையத்தில் ஆண்ட்ரு சியா என்று எவரும் வேலை செய்யவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

எனவே, இத்தகைய மோசடிக் கடிதம் கிடைக்கப்பெற்ற வீட்டு உரிமையாளர்கள் காவல்துறையில் அதுபற்றி புகார் செய்யலாம் என்று ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்