2026ல் கூடுதல் வீடுகள் சந்தைக்கு வரவுள்ளன

நிலைபெற்றது வீட்டு வாடகைச் சந்தை

3 mins read
41f9506d-ea40-4bb7-abef-216847d6faaf
2025ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் வாடகை வீடுகள் தொடர்பான நடவடிக்கைகள் சற்றுத் தணிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வாடகை வீட்டுச் சந்தை இவ்வாண்டு (2025) நிலைபெற்றுள்ளது.

சென்ற ஆண்டில் தனியார் வீடுகளுக்கான வாடகை குறைந்திருந்தது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கான வாடகை உயர்வு வெகுவாக மெதுவடைந்துள்ளது. அதை ஈடுகட்ட 2026ஆம் ஆண்டில் கூடுதல் வீடுகள் சந்தையில் வாடகைக்குக் கிடைக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2025ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் இரு சந்தைகளிலுமே வாடகை வீடுகள் தொடர்பான நடவடிக்கைகள் சற்றுத் தணிந்துள்ளன. நகர மறுசீரமைப்பு ஆணையம், சொத்து இணையவாசல்களான சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் எக்ஸ்சே‌‌ஞ், 99.கோ முதலியவற்றின் தரவுகளில் அந்த விவரம் தெரியவந்தது.

அதற்குக் காரணம், வாடகை வீடுகளுக்கான தேவை குறைந்ததன்று என்றும் ஆண்டிறுதியில் வீட்டு உரிமையாளர்களும் குடியிருப்போரும் வெளிநாடுகளுக்குச் செல்வதே என்றும் சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

2025ல் பொதுவாக வாடகைச் சந்தை நிலைபெற்றது என்று ரிலேயான் (ஆரஞ்ச்டீ, இடிசி) குழுமத்தின் தலைமை ஆய்வாளர் கிறிஸ்டீன் சுன் கூறினார்.

வளர்ச்சி, கிட்டத்தட்ட இரண்டரை முதல் மூன்று விழுக்காட்டுக்குள் இருந்ததாக அவர் சொன்னார். அத்தகைய வளர்ச்சியையே அடுத்த ஆண்டிலும் எதிர்பார்ப்பதாகத் திருவாட்டி சுன் தெரிவித்தார்.

தனியார் வீடுகளின் வாடகை 2023ல் உச்சம் தொட்டது. பின்னர் கடந்த ஆண்டு 1.9 விழுக்காடு குறைந்த அது, இந்த ஆண்டில் நிலைபெறும் கட்டத்தை அடைந்தது.

அதிகமான கூட்டுரிமை வீடுகள் நிறைவுறுவதும் கவனத்தோடு வாடகைக்கு வீடுகளை விடுவதும் வாடகைச் சந்தைக்குச் சவால்களாக இருக்கக்கூடும் என்று திருவாட்டி சுன் கூறினார்.

ஆரஞ்ச்டீயின் அடுத்த ஆண்டுக்கான வாடகைச் சந்தைக் கண்ணோட்ட அறிக்கையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். நிலையான உலகப் பொருளியலும் சிங்கப்பூருக்குள் தொடர்ந்து வரும் வெளிநாட்டவர்களும் அவற்றைச் சமாளிக்கக் கைகொடுக்கக்கூடும் என்றார் திருவாட்டி சுன்.

தனியார் சொகுசுக் கூட்டுரிமை வீடுகளைப் பொறுத்தவரை, வாடகை இவ்வாண்டு முழுமைக்கும் கிட்டத்தட்ட 2 விழுக்காடு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன்ஸ் ஏ‌ஷியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் லீ சு டெக் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு அது 4.3 விழுக்காடு குறைந்திருந்தது.

2025ல் நிலைபெற்ற வீவக வீட்டு வாடகைகள்

வீவக வீடுகளின் வாடகைகள் இவ்வாண்டு ஏறக்குறைய 1.4 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எஸ்ஆர்எக்ஸ், 99.கோ ஆகியவற்றின் தரவுகள் காட்டுகின்றன.

சென்ற ஆண்டின் 3.7 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது குறைவு. ஒப்புநோக்க, வளர்ச்சி 2023ல் 10.2 விழுக்காடாகவும் 2022ல் 28.5 விழுக்காடாகவும் இருந்தது.

இருப்பினும் மாதாந்திர அடிப்படையில் வீவக வீட்டு வாடகைகள், மூன்று மாதச் சரிவுக்குப் பிறகு, நவம்பரில் மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன.

சென்ற மாத வளர்ச்சி 0.5 விழுக்காடு. மூவறை வீடுகளைப் போன்ற சிறிய வீடுகள் அதற்குத் துணைபுரிந்தன. 99.கோ நிறுவனத்தின் தலைமைத் தரவு, பகுப்பாய்வு அதிகாரி லுக்மன் ஹக்கிம் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

குறைந்தபட்சத் தங்கும் காலமான ஐந்தாண்டை எட்டும் வீவக வீடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் கூடவிருப்பது அடுத்த ஆண்டின் பொது வீடமைப்பு வாடகைச் சந்தையின் போக்கை மாற்றியமைக்கும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அடுத்த ஆண்டு அத்தகைய ஏறக்குறைய 13,500 வீவக வீடுகள் சந்தையில் இருக்கும் என்று முன்னுரைக்கப்படுவதாக ஆரஞ்ச்டீயின் அறிக்கை சுட்டியது. இவ்வாண்டில் அத்தகைய சுமார் 7,000 வீடுகள் சந்தையில் இருந்தன.

குறிப்புச் சொற்கள்