சிங்கப்பூரின் பாதுகாப்பிற்காக உள்துறைக் குழுவினர் மேற்கொள்ளும் பணிகளையும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள அவர்கள் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பங்களையும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தும் ‘உள்துறைக் குழு விழா 2026’, சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) மிகச்சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இவ்விழாவின் இந்த ஆண்டு நிகழ்ச்சிகளுக்கான கருப்பொருள், ‘ஒன்றிணைவோம், நாம் அனைவரும் உள்துறைக் குழுவின் நாயகர்கள்’ என்பதாகும். நிலையத்தின் 401 முதல் 406 வரையிலான அரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) வரை இது நடைபெறும்.
உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங், உள்துறை, வெளியுறவுத் துணையமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் இருவரும் விழா அரங்குகளைப் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோ பெய் மிங், இவ்விழாவின் நோக்கத்தை விளக்கினார். உள்துறைக் குழு அமைப்புகளின் மிகப் பெரிய பொதுக் கண்காட்சி இதுவென அவர் குறிப்பிட்டார்.
“நேரடிச் சாகசங்கள், ஊடாடும் கண்காட்சிகள் மூலம் உள்துறைக் குழுவினரின் பணிகளை மக்கள் ஆழமாகப் புரிந்துகொள்வார்கள். சிங்கப்பூரின் பாதுகாப்பில் தாங்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். இவ்விழாவிற்குச் சிங்கப்பூரர்கள் அனைவரும் வருகைதர வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
முதல் முறையாகக் காட்சிக்கு வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள்
இவ்விழா ‘ஊக்குவிப்போம்’ (Inspire), ‘ஒளியூட்டுவோம்’ (Illuminate), ‘கற்பனை செய்வோம்’ (Imagine), ‘ஈடுபடுத்துவோம்’ (Involve) என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், எதிர்காலப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ‘கற்பனை செய்வோம்’ பகுதியில் பல புதிய கருவிகள் முதல் முறையாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மின்சார வாகன விபத்துகளில் மீட்புப் பணிகளுக்காகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை புதிய ஆளில்லா வாகன மீட்பு ரோபோவை (VXR) உருவாக்கியுள்ளது. அதிக வெப்பத்திலிருந்து மீட்புப் பணியாளர்களைப் பாதுகாப்பதோடு தொலைவிலிருந்தே தீயை அணைக்கவும் இந்த ரோபோ உதவுகிறது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் உள்துறை அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் (HTX) இணைந்து வடிவமைத்துள்ள ஏழாம் தலைமுறை நவீன அவசர மருத்துவ வாகனத்தையும் பொதுமக்கள் பார்க்கலாம். இது அவசரகாலச் சிகிச்சையை விரைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் ஒரே நேரத்தில் இரு நோயாளிகளை ஏற்றிச்செல்ல முடியும்.
மேலும், வன்போலிக் காணொளிகளை (Deepfake) அடையாளம் காண அமைப்பு உருவாக்கியுள்ள ‘ஆல்கெமிக்ஸ்’ (AlchemiX) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கப்பல்களின் பக்கவாட்டில் காந்த சக்தி மூலம் ஏறிச் செல்லும் ‘புரொஜெக்ட் ஸ்பைடர்’ (Project SPYDER) ரோபோக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.
நேரடி சாகசங்களும் விழிப்புணர்வு அனுபவங்களும்
‘ஊக்குவிப்போம்’ பகுதியில் சிங்கப்பூர்க் காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படையின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு, மஞ்சள் நாடா திட்டத்தின் 50வது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சிறப்பு வரலாற்றுச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
‘ஒளியூட்டுவோம்’ பகுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நவீன சோதனைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் புதிர் விளையாட்டுகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. சிறை அதிகாரிகளின் பணியை உணர்த்தும் மெய்நிகர் அனுபவங்களையும் பொதுமக்கள் பெறலாம்.
‘ஈடுபடுத்துவோம்’ பகுதியில் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளன. உள்துறைப் படையில் இணைய விரும்புவோருக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சி விவரங்கள்
இக்கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம்.
பொதுமக்கள் நவம்பர் 20ஆம் தேதி காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், நவம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், நவம்பர் 22ஆம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்திற்குச் சென்று இதைப் பார்வையிடலாம்.
நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு www.mha.gov.sg/hometeamfestival எனும் இணையத்தளத்தை நாடலாம்.
