2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் இயந்திர மனிதர்களுடன் உள்துறைக் குழு அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவர்.
தீயணைப்பு, அபாயகரமான பொருள்கள் தொடர்பான பணிகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் போன்றவற்றில் இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படும். முதலில், இந்த இயந்திர மனிதர்களை அதிகாரிகள் வேறோர் இடத்திலிருந்து இயக்குவர்.
அதன் பிறகு, 2029ஆம் ஆண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு மூலம் அவை தானாகவே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தானாக இயங்கும்போது வெவ்வேறு சூழல்களின்போது அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இயந்திர மனிதர்களுக்குத் தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு உதவும். தேவை ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகள் மேற்பார்வையிடுவர், தலையிடுவர்.
உள்துறைக் குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இந்த இயந்திர மனிதர்களை உருவாக்குகிறது. அவற்றில் நான்கு, செயற்கை நுண்ணறிவு டெக்எஸ்பிளோர் கண்காட்சியில் திங்கட்கிழமை (மே 26) காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த இரண்டு நாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி ஃபுஷனோபொலிஸ் ஒன்னில் நடைபெறுகிறது. காட்சிக்கு வைக்கப்பட்ட மூன்று இயந்திர மனிதர்களின் உயரம் ஏறத்தாழ 1.7 மீட்டர்.
நான்காவது இயந்திர மனிதனின் உயரம் இதைவிட அரை மீட்டர் குறைவு.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, புதிய உள்துறைக் குழு இயந்திர மனிதர்கள் நிலையத்தில் $100 மில்லியன் முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய வசதி அமைக்கப்படுவது உலகிலேயே இது முதல்முறை.
2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து புதிய நிலையம் இயங்கத் தொடங்கும்.
தரவுத் திரட்டு, செயற்கை நுண்ணறிவு மாதிரிப் பயிற்சி மற்றும் இயந்திர மனிதர்கள் உருவாக்கம் ஆகிய பிரிவுகளை புதிய நிலையம் கொண்டிருக்கும்.
அதுமட்டுமன்றி, உயர் செயல்திறன்கொண்ட கணினி வளங்களும் இடம்பெறும்.
“இதற்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் தொழில்நுட்பத்தைக் குற்றவாளிகள் தவறான முறையில் பயன்படுத்தினர். எனவே, தொழில்நுட்பம் எப்படியெல்லாம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகளும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
“ஆனால் அது மட்டுமே போதாது. குற்றச் செயல்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் முக்கியம்,” என்றார் அமைச்சர் டியோ.