தெங்காவிலும் ‘ஹோம்டீம்என்எஸ்’ கேளிக்கை நிலையம்

2 mins read
40453753-5129-49e1-97af-6716acc52bef
ஹோம்டீம்என்எஸ் விருது நிகழ்ச்சியில் அதன் 20 ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (இடமிருந்து மூன்றாவது) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் 2031ஆம் ஆண்டுக்குள் தெங்கா வட்டாரத்தில் உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவைச் சேர்ந்த தேசிய சேவையாளர்களுக்கான (ஹோம்டீம்என்எஸ்) கேளிக்கை நிலையம் அமைக்கப்படும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே காத்திப், பிடோக் ரெசர்வோர் (Bedok Reservoir) வட்டாரங்களில் நவீன வசதிகளைக் கொண்ட ஹோம்டீம்என்எஸ் கேளிக்கை நிலையங்கள் அமைந்துள்ளன. இப்போது முன்றாவதாக தெங்காவிலும் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

காத்திப் ஹோம்டீம்என்எஸ் கேளிக்கை நிலையத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) நடந்த உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விருது நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம் இதனை அறிவித்தார்.

உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவு தேசிய சேவையாளர்கள் ஆற்றிவரும் பங்கை உள்துறை அமைச்சு அறிவதாக விருது நிகழ்ச்சியில் திரண்டிருந்த 200க்கும் அதிகமானோரிடம் திரு சண்முகம் கூறினார். உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவில் 270,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

தெங்கா ஹோம்டீம்என்எஸ் கேளிக்கை நிலையம், வெளிப்புற நடவடிக்கை வசதிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்படும். தற்போது புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள ஹோம்டீம்என்எஸ் கேளிக்கை நிலையத்துக்குப் பதிலாக தெங்காவில் புதிய நிலையம் அமையும்.

தேசிய சேவையாளர்கள் ஆற்றிவரும் பங்கை அங்கீகரிக்க சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒவ்வொரு தேசிய சேவையாளருக்கும் 200 வெள்ளி லைஃப்எஸ்ஜி சிறப்புத் தொகை வழங்கப்பட்டது. அதோடு, வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து முழுநேர தேசிய சேவையாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியத் தொகை 35லிருந்து 75 வெள்ளி வரை அதிகரிக்கப்படும்.

ஓய்வுபெற்ற தேசிய சேவையாளர்கள் ஆற்றிவரும் பங்கைப் பாராட்டிப் பேசிய திரு சண்முகம், “நீங்கள் நமது முழுநேர அதிகாரிகளுடன் சேர்ந்து உழைக்கிறீர்கள், பயிற்சி மேற்கொள்கிறீர்கள், அதே பணிகள் பலவற்றை மேற்கொள்கிறீர்கள். நீங்கள் சாலைகளில் சுற்றுக்காவலில் ஈடுபடுகிறீர்கள், குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறீர்கள், தீச்சம்பவங்களைக் கையாள்கிறீர்கள், அவசர மருத்துவச் சூழல்களைக் கையாள்கிறீர்கள்; பல்வேறு சம்பவங்களை எதிர்கொள்வதுடன் பலவிதத்தில் பங்காற்றுகிறீர்கள்.

“உங்களின் பங்களிப்பு, உள்தறை அமைச்சின் சீருடைப் பிரிவைச் சிறப்பாகச் செயல்படுவதற்கும் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக, ஆபத்தின்றி வைத்துக்கொள்வதற்கும் உதவியிருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

ஹோம்டீம்என்எஸ், இவ்வாண்டு அதன் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

விருது நிகழ்ச்சியில் கர்னல் ஜாஹான் சில்வா தின் அப்துல்லாவுக்கு ‘பிளாட்டினம் சிறப்புத் தேர்ச்சி விருது’ (Platinum Meritorious Award) வழங்கப்பட்டது.

‘பிளாட்டினம் சிறப்புத் தேர்ச்சி விருது’ பெற்ற கர்னல் ஜாஹான் சில்வா தின் அப்துல்லா (இடது).
‘பிளாட்டினம் சிறப்புத் தேர்ச்சி விருது’ பெற்ற கர்னல் ஜாஹான் சில்வா தின் அப்துல்லா (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய, நடுத்தர நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப இயக்குநராக வேலை செய்யும் இவர், 2017ஆம் ஆண்டிலிருந்து ஹோம்டீம்என்எஸ் நிர்வாகக் குழுவுக்குப் பங்காற்றிவருகிறார். ஹோம்டீம்என்எஸ் தகவல், தொழில்நுட்பப் குழுவின் தலைவராக 45 வயது கர்னல் ஜாஹான் சில்வா தின் அப்துல்லா பணியாற்றிவருகிறார்.

குறிப்புச் சொற்கள்