ஹாங்காங் தீச்சம்பவத்தில் பலியானோருக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தீயினால் உயிரிழப்பு ஏற்பட்ட துயரச் சம்பவத்தை எண்ணித் தாம் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகியிருப்பதாக திரு வோங் சொன்னார்.
வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீக்கு உறவினர்களைப் பறிகொடுத்த குடும்பத்தாரையும் உயிர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டோர் உட்பட காயமுற்றோரையும் தாம் நினைவில் கொள்வதாக திரு வோங் கூறினார். சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் அவர் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் டாய் போ வட்டாரத்தில் உயரமாக இருக்கும் குடியிருப்புக் கட்டடங்களில் புதன்கிழமை (நவம்பர் 26) தீ மூண்டது. அதில் 100க்கும் அதிகமானோர் பலியாயினர், பலரைக் காணவில்லை.
“ஹாங்காங் மக்கள் என்றும் சவாலான காலத்தில் மீண்டெழுந்து மனவுறுதியுடன் இருந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவத்திலிருந்தும் அவர்கள் அதே மனவலிமையுடனும் மனவுறுதியுடனும் மீண்டு வருவர் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றார் பிரதமர் வோங்.
தீச்சம்பவத்துக்குப் பலியானோரில் தீயணைப்புப் பணியாளர் ஒருவரும் அடங்குவார்.

