வெளிநாட்டுத் திறனாளர்களுக்குச் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
வட்டார அளவில் நிதி நடுவங்களாக திகழும் இரண்டு நகரங்களும் பல வெளிநாட்டுத் திறனாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
பட்டியலை மெர்சர் நிறுவனம் வெளியிட்டது.
பொதுவாக இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நகரங்கள் முதலிடங்களில் வருவது வழக்கம். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஹாங்காங்கில் வீட்டு வாடகை அதிகரித்ததுதான் அதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஸூரிக், ஜெனிவா, பேசல், பெர்ன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஏழாவது இடத்திலும் லண்டன் எட்டாவது இடத்திலும் உள்ளன.
முதல் 30 இடங்களில் மேலும் இரண்டு ஆசிய நகரங்கள் உள்ளன. துபாய் 15வது இடத்திலும் பெய்ஜிங் 25வது இடத்திலும் உள்ளன.
வீட்டு வாடகை அதிகரிப்பு, வாழ்க்கை செலவுகள் கூடுவது வெளிநாட்டுத் திறனாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாகக் கருதுகிறது. இது வெளிநாட்டுத் திறனாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.


