சீனப் புத்தாண்டை முன்னிட்டு தேசிய மரபுடைமைக் கழகத்தின் ‘அரும்பொருளக வட்டமேசை அங் பாவ்’ திட்டம் (Museum Roundtable Hongbao Campaign) புதிய பொலிவுடன் மீண்டும் நடப்புக்கு வருகிறது.
சிங்கப்பூரின் அரும்பொருளகங்களைச் சுற்றிப்பார்க்கும் அதே வேளையில் பண்டிகைக்கால நினைவுப் பொருள்களைச் சேகரிக்கப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் இத்திட்டம், இவ்வாண்டு ஜனவரி 23 முதல் பிப்ரவரி 15 வரை நடைபெறும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் 49 அருங்காட்சியகங்கள், மரபுடைமை நிலையங்கள், கலைக்கூடங்களுக்குச் சென்று பொதுமக்கள் சிறப்பு சிவப்பு நிற உறைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
குதிரை ஆண்டை முன்னிட்டு, அழகிய குதிரைச் சின்னம் கொண்ட 49 தனித்துவமான வடிவமைப்புகள் இந்த ஆண்டின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வடிவமைப்பும் அந்தந்த நிலையத்தின் அடையாளம், சேகரிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய நிறுவனங்கள் முதல் மரபுடைமை இடங்கள் வரை, சிங்கப்பூரின் கலாசாரப் பன்முகத்தன்மையை இந்தச் சிவப்பு உறைகள் பிரதிபலிக்கின்றன.
ஒவ்வோர் இடத்திலும் ஒருவர் ஆறு சிவப்பு உறைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு, புதிதாக ‘அங் பாவ் வேட்டை’ (Hongbao Hunt) என்ற நடவடிக்கையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய மரபுடைமை நிலையம், ஆசிய நாகரிகங்கள் அரும்பொருளகம், சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், பெரனாக்கான் அரும்பொருளகம், சாங்கி சிற்றாலயமும் அரும்பொருளகமும் (Changi Chapel and Museum), புக்கிட் சந்து நினைவிட அரும்பொருளகம் (Reflections at Bukit Chandu) ஆகிய ஆறு தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்களில் இது இடம்பெறும்.
ஒவ்வோர் இடத்திலும் பங்கேற்பாளர்கள் தங்கள் கைப்பேசிமூலம் பதிவுசெய்து, புதிர்களுக்கு விடையளித்து அரும்பொருளகத்தில் உள்ள குறிப்பிட்ட கலைப்பொருள்களைக் கண்டறிய வேண்டும். அவற்றைப் புகைப்படமாக ஸ்கேன் (scan) செய்வதன் மூலம் பெறப்படும் தனித்துவமான ‘கியூஆர்’ (QR) குறியீடுகளைப் பயன்படுத்தி, அங்குள்ள தானியக்க இயந்திரங்களிலிருந்து சிவப்பு உறைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு அப்பாற்பட்டு, ‘ஐ லவ் மியூசியம்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டு இணையவழிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் 30 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பங்கேற்கும் 49 நிறுவனங்களின் முழுமையான சிவப்பு உறைகள் தொகுப்பும் பரிசாக வழங்கப்படும்.
“இத்திட்டம் சிங்கப்பூரின் தேசியத் தொகுப்புகள் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதையும், ஈடுபாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பார்வையாளர்கள் நிதானமாகப் பார்வையிடவும், உற்றுநோக்கவும், முக்கியக் கலைப்பொருள்களுக்குப் பின்னால் உள்ள கதைகளைக் கண்டறியவும் இது ஊக்குவிக்கும்,” என்றார் தேசிய மரபுடைமைக் கழகத்தின் அனைத்துலக, அருங்காட்சியக உறவுகள் இயக்குநர் கோ சுர் தோங்.
‘அருங்காட்சியக வட்டமேசை அங் பாவ் திட்டம் 2026’ குறித்த மேல் விவரங்களுக்கு go.gov.sg/MRHongbao2026 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
பாரம்பரியம், கண்டுபிடிப்பு, விளையாட்டு ஆகியவற்றின் கலவையாகத் திகழும் இந்தத் திட்டம், பண்டிகைக்காலத்தில் அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை என்றும் நினைவில் நிற்கும் உற்சாகமான அனுபவமாக மாற்றுகிறது.

