சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு அந்திமகாலப் பராமரிப்பு வழங்க, ‘உட்லண்ட்ஸ் ஹாஸ்பிஸ்’ திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் மருத்துவமனையின் E71 படுக்கைப் பிரிவில் தற்போது 16 படுக்கைகளுடன் ஜூலை 1 முதல் உட்லண்ட்ஸ் அந்திமகாலப் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை 70ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி உயர்த்தப்பட்டால், இது சிங்கப்பூரின் மிகப்பெரிய அந்திமகாலப் பராமரிப்பு மையங்களில் ஒன்றாகத் திகழும்.
மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங், “தீவின் பிற பகுதிகளில் அந்திமகாலப் பராமரிப்பு வழங்கும் வசதிகள் இருந்தாலும், வடக்குப் பகுதியில் இத்தகைய பிரத்தியேக மையம் இல்லாத குறை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
திடீர் மாரடைப்பு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு தீவிர சிகிச்சை பலனளிக்காத சூழலில், அவர்களின் வேதனையைக் குறைக்கும் வகையிலேயே அந்திமகாலப் பராமரிப்பு அளிக்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
உட்லண்ட்ஸ் மருத்துவமனையும் ரென் சி மருத்துவமனையும் இணைந்து அந்த மையத்தை நிர்வகிக்கின்றன. உட்லண்ட்ஸ் மருத்துவமனை, நிபுணத்துவச் சிகிச்சையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகிறது. ரென் சி மருத்துவமனை தாதிமை, மனநல ஆதரவுச் சேவைகளை வழங்குகிறது.
செங் ஹோங் நலச்சேவை சங்கம் இதில் சமூகப் பராமரிப்புப் பங்காளியாக இணைந்து, அடுத்த ஆறாண்டுகளுக்கு $6 மில்லியன் நிதியுதவி வழங்க கடப்பாடு கொண்டுள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் இதுவரை ஏறக்குறைய 30 நோயாளிகளுக்கு அந்திமகாலப் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பெறுவோர் அங்கு சராசரியாகத் தங்கியிருக்கும் காலம் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரையாகும்.
அடுத்த ஆறாண்டுகளில் 2,900க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகளின் மன அமைதியைப் பேணும் வகையில் இசை, கலை சிகிச்சையுடன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வசதிகளும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2030க்குள் பொதுவான அந்திமகாலப் பராமரிப்புப் பிரிவில் 10,000 தாதியர்களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்க சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கடந்த ஏப்ரலில் திரு ஓங் தெரிவித்திருந்தார்.
தற்போது, தனித்து இயங்கும் அந்திமகாலப் பராமரிப்பு மையங்கள் அல்லது சமூக மருத்துவமனைகளில் உள்ள மிகப்பெரிய படுக்கை வசதிகள் 70 முதல் 100 படுக்கைகள் வரை மாறுபடுகின்றன.
சிங்கப்பூரில் தனித்து இயங்கும் அந்திமகாலப் பராமரிப்பு மையங்கள், அந்திமகாலப் பராமரிப்பு படுக்கைப் பிரிவுகளைக் கொண்ட சமூக மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 10ஆக உள்ளது.

