ஆண் நோயாளியை மானபங்கம் செய்த முன்னாள் மருத்துவமனை ஊழியர்க்குச் சிறை

1 mins read
நோயாளியின் தோல்மீது குற்றம் புரிந்தவரின் தோல் படவில்லை என்பதால், அவருக்குப் பிரம்படி விதிக்கப்படவில்லை: நீதிபதி
aa243331-9cc5-4e38-ae7c-40402fe29c02
டனிஷா நூர் டெலிசா டேவாவுக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங்கில் உள்ள இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் 23 வயது ஆண் நோயாளியை 2023ல் மானபங்கம் செய்த முன்னாள் ஊழியர் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமது வேலை ஒப்பந்தம் முடிவடைந்ததால், சிங்கப்பூரரான டனிஷா நூர் டெலிசா டேவா எனும் அந்த ஆடவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் இப்போது பணியில் இல்லை.

அந்த நோயாளி மருத்துவமனை உடையை அணிந்திருந்தபோது, அவரின் அந்தரங்கப் பகுதியை டனிஷா, 36, அழுத்தினார்.

வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் மீதான மானபங்கக் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் அந்த நோயாளியின் தோல்மீது டனிஷாவின் தோல் படவில்லை என்பதால், டனிஷாவுக்குப் பிரம்படி விதிக்கப்படவில்லை என முதன்மை மாவட்ட நீதிபதி லீ லி செங் தீர்ப்பின்போது கூறினார்.

ஆனாலும், மருத்துவமனையில் அடிப்படைப் பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரிந்த டனிஷா, தமது பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாக நீதிபதி வலியுறுத்தினார்.

முன்னதாக, அந்த நோயாளியை மானபங்கம் செய்த குற்றத்தை ஏற்க மறுத்துவிட்ட டனிஷாவுக்காக தற்காப்பு வழக்கறிஞர் டியோ சூ கீ வாதிட்டார்.

குறிப்புச் சொற்கள்