$5.7 மி. மதிப்பிலான பொருள்கள் திருட்டு: பணத்தை மீட்க நடவடிக்கை

2 mins read
1d99a5c0-6612-48d8-9d52-913ed67df0c1
மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட பொருட்களை வாங்கிய மூன்றாம் தரப்பு நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தை மீட்க கூ டெக் புவாட் மருத்துவமனை கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூ டெக் புவாட் மருத்துவமனையின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் எட்டாண்டுக் காலத்தில் $5.7 மில்லியன் மதிப்பிலான பொருள்களைத் திருடி, அவற்றை மூன்றாம் தரப்பினரிடம் விற்றதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில், அந்தப் பொருள்களை வாங்கிய மூன்றாம் தரப்பு நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான வெள்ளியை மீட்க கூ டெக் புவாட் மருத்துவமனை கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மூன்றாம் தரப்பு நிறுவனமான ‘கான்ட்லி லைஃப் கேரும்’ அதன் இயக்குநர்கள் ஹென்றி ஹோ யோங் ஷி, சோ தியான் ஹுவீ இருவரும் மொத்தம் $5.7 மில்லியன் மதிப்புள்ள ‘திருட்டுப் பொருள்களை’ வாங்கியதாக மருத்துவமனை குற்றம் சாட்டியுள்ளது. அந்தப் பொருள்களில் பால்மாவும் அடங்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றத்தில் கூ டெக் புவாட் மருத்துவமனை தாக்கல் செய்த மனுவில், அதன் முன்னாள் மூத்த சில்லறை விற்பனை அதிகாரி ரே சூ தியோங் ஹியானுக்கு மேற்கூறப்பட்ட அந்த மூன்று பிரதிவாதிகள் கையூட்டு கொடுத்ததாக குற்றம் சாட்டியது.

மேலும், மருத்துவமனை பொருள்களை தங்களுக்கு வழங்க அவர்கள் தூண்டியதாகவும் அது குறிப்பிட்டது.

அவர்கள் சூவுக்கு கையூட்டாக மொத்தம் $142,650, அல்லது தாங்கள் வாங்கிய திருட்டுப் பொருள்களின் மொத்த மதிப்பான $4.76 மில்லியனில் 3 விழுக்காட்டைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பொருள்களுக்கான பணத்தை மருத்துவமனையிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக சூவிடம் அவர்கள் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்குக் கிட்டத்தட்ட $5.7 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

2014ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மருத்துவமனையின் அறை ஒன்றிலிருந்து ஏறக்குறைய $5.5 மில்லியன் பெறுமானமுள்ள பொருள்கள் எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் அக்டோபர் 10 ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், தனக்கும் சூவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் சூவின் செயல்பாடு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்