கேபி.1, கேபி.2 போன்ற துணைத்திரிபுகளால் ஏற்பட்ட கொவிட்-19 தொற்று அலை தணிந்து வருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வாரங்களில் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்குச் சான்று என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
அவர் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக இதனைத் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 அலை உருவெடுத்தது. முதலிரு வாரங்களில் அதிகரித்த பாதிப்பால் மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 280 பேர் சேர்க்கப்பட்டனர்.
“அப்போது, ஆண்டு நடுப்பகுதி பயணப் பருவத்தை நெருங்கியதால் இயல்பாகவே எனக்குக் கவலை எழுந்தது. கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி, அதாவது 280 என்பது 500ஆகி, பின்னர் 1,000ஆக ஆகிவிட்டால், ஒரு வட்டார மருத்துவமனை முழுவதுமே தீவிர கொவிட்-19 நோயாளிகளால் நிரம்பிவிடும்,” என்று அமைச்சர் ஓங் தமது பதிவில் எழுதியுள்ளார்.
“அது ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் நமது சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை மோசமாகப் பாதித்து, காத்திருப்பு நேரத்தை மேலும் நீட்டித்துவிடும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுத் தரவுகளின்படி, இவ்வாண்டு மே 5ஆம் தேதியன்று, வாராந்தர கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு 25,900ஆக உச்சமடைந்தது. அதற்கடுத்த வாரத்தில் 21,900ஆகக் குறைந்த அந்த எண்ணிக்கை, பின்னர் மே 19ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மீண்டும் 24,800க்கு அதிகரித்தது.
ஜூன் விடுமுறைக் காலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மே 26ஆம் தேதி 17,400க்குச் சரிந்த வாராந்தரத் தொற்று, ஜூன் 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 8,730க்குக் குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 136க்கு இறங்கியது.
இதனிடையே, தொற்றுப் பாதிப்பு குறைந்து வந்தாலும், இதுவே கடைசி கொவிட்-19 தொற்று அலையாக இராது என்று அமைச்சர் ஓங் கூறியிருக்கிறார்.
“ஒவ்வோர் அலையின்போதும், மருத்துவமனைகளில் அதிகப்படியான நோயாளிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது பற்றிக் கவலைப்படுவோம். கொவிட்-19 கிருமி தொடர்ந்து மாற்றமடைவதே இதற்குக் காரணம். காலம் செல்ல செல்ல நமது தடுப்பூசி தயாரிப்பும் குறையலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து, பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவோம் என்றும் அவர் சொன்னார்.

