ஹவ்காங் தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: மரண விசாரணை தொடங்கியது

ஹவ்காங் தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: மரண விசாரணை தொடங்கியது

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2026 - 5:45 pm

2 mins read

ஹவ்காங் வட்டாரத்தில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் நடந்த தீ விபத்தில் கணவன், மனைவி, அவர்களின் 18 வயது மகள் ஆகிய மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்த மரண விசாரணை திங்கட்கிழமை (செப்டம்பர் 21) தொடங்கியது.

2025ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, புளோக் 971 ஹவ்காங் ஸ்திரீட் 91ல் உள்ள மூன்றாம் தளக் குடியிருப்பில் அந்தத் தீ விபத்து நடந்தது.

அதில், 62 வயது லீ சுன் கியாக், அவரது மனைவி 56 வயது சியாவ் சியூ சூ, மகள் கிரேஸ் லீ ஆகியோர் உயிரிழந்தனர்.

வீட்டின் உள்ளே தேவைக்கு அதிகமான பொருள்களைச் சேமிக்கும் பழக்கம் அக்குடும்பத்திடம் இருந்ததாகக் கூறப்பட்டது.

அதனால், மீட்புப் பணியின்போது குடிமைத் தற்காப்புப் படையினர் உள்ளே செல்வதற்கான பாதையை உருவாக்கப் பொருள்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

அவ்வீட்டின் முதன்மைப் படுக்கையறையில் உள்ள சுவரில் மின் விளக்கு போன்ற மின் கருவிகளைப் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பொருத்துவாயில் ஏற்பட்ட உட்புற வீக்கமே தீ விபத்திற்குக் காரணம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவ்வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீ வேகமாகப் பரவக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டது.

காவல் துறையின் விசாரணையில், அக்குடும்பத்தின் தேவைக்கு அதிகமாகப் பொருள்களைச் சேமிக்கும் பழக்கம் குறித்து 2024ஆம் ஆண்டு வீடமைப்பு வளர்ச்சி கழக அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இருப்பினும், அவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலனளிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

தீவிபத்தில் உயிரிழந்த 18 வயது கிரேஸ் லீக்கு உயிர்மாய்ப்பு எண்ணங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தொழில் தொடங்கும் ஆசையுடன் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயின்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த தாய், மகளின் மரணத்திற்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணரின் விளக்கத்தைப் பெற, மரண விசாரணை அதிகாரியான ஆடம் நகோடா விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்