ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்று தீ மூண்டதில் மூவர் மாண்டனர்.
மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புளோக் 971 ஹவ்காங் ஸ்திரீட் 91ன் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முதலில் இரு உடல்களைப் படுக்கையறையில் கண்டனர்.
மூன்றாவது உடல் பின்னர் கண்டெடுக்கப்பட்டதாக மாலையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வியாழக்கிழமை (ஜனவரி 9) பிற்பகல் 12.40 மணி அளவில் அதுகுறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பு வீரர்கள் தீ மூண்ட வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர்.
ஆனால் வீட்டிற்கு அளவுக்கு அதிகமான பொருள்கள் இருந்ததால் உள்ளே செல்வது சிரமமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற்பகல் 3.15 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு பூனை, ஒரு பறவை, எட்டு முயல்கள் அவ்வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்டடத்தின் முதல் ஏழு மாடிகளிலிருந்து கிட்டத்தட்ட 30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட கட்டடத்தில் மொத்தம் 15 மாடிகள் உள்ளதாக அந்த அடுக்குமாடியின் மூன்றாவது மாடியில் குடியிருக்கும் திருவாட்டி மோகனப்பிரியாக கூறினார்.
“பகல் 12.45 மணியளவில் திடீரென மூச்சு முட்டியது. புகை மூட்டம் என்று நினைத்து வெளியே பார்த்தபோது தீயணைப்பு வாகனங்கள் காணப்பட்டன. உடனே கீழே இறங்கிச் சென்றேன்.” என்றார் அவர்.
“அந்த வீட்டில் குடியிருந்த சீனர்களைப் பார்த்துள்ளேன். பழைய பொருள்களைச் சேகரிப்பவர்கள். வீட்டில் நிறைய பொருள்கள் இருக்கும். வீட்டின் வாசல் வரை அவை நிறைந்திருக்கும். அவர்கள் நாய், பூனை உள்பட வளர்ப்புப் பிராணிகளும் இருந்தனர்,” என்று வருத்தத்துடன் அவர் கூறினார்
இரவு வரையில் மூன்றாம் மாடியில் குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற திருவாட்டி மோகனப்பிரியா, தமது குடும்பத்தினருடன் ஹோட்டலில் தங்கினார்.
இரவு வரையில் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் அந்த அடுக்குமாடியில் இருந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், இரண்டு வெடிப்புகள் கேட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் பாதிக்கப்பட்ட கட்டடத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் வசிப்பவர்.
“அந்த வீட்டிலிருந்து புகை கிளம்புவதை என் வீட்டுச் சன்னல் வழியாகப் பார்த்தேன். அப்போதுதான் அந்த வீடு தீப்பற்றி எரிகிறது என்பதை உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

