ஹவ்காங்கில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார். புளோக் 210 ஹவ்காங் ஸ்தீரிட் 21ல் நடந்த இச்சம்பவத்தில் வன்பொருள்களை விற்பனை செய்யும் கடையில் பணியாற்றியதாக நம்பப்படும் 34 வயது மாதுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மாண்டார்.
அக்கடையில் பணியாற்றிய மற்றோர் 26 வயது ஆடவருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
தாக்குதல்காரரும் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
கோவன் சந்தை, உணவு நிலையத்திற்கு அருகே இருக்கும் குவான் லாங் நிப்பான் வண்ணப்பூச்சு வன்பொருள் கடையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) காலை 11 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும் அக்கடையில் இருந்து ஒரு மாதின் அலறல் சத்தம் கேட்டதாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அக்கடையில் விநியோகிப்பாளராகப் பணியாற்றிய 42 வயது ஆடவர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கத்தியைப் பயன்படுத்தி அப்பெண்ணை அவர் தாக்கியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.
“தாக்குதல்காரரிடமிருந்து தப்பிக்க அந்த மாது முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. அக்கடையில் பணியாற்றிய மற்றோர் ஊழியர் தாக்குதல்காரரிடம் சண்டையிட்டார். அவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, அந்த மாதின் முதுகுப்பகுதியில் நிறைய வெட்டுக்காயங்கள் இருந்தன,” என சாட்சிகள் சம்பவத்தை விவரித்தனர்.
சில நிமிடங்களில் மருத்துவ உதவியாளர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாகவும் ஆயுதங்கள் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உதவி வேண்டி தங்களுக்கு செவ்வாய்க்கிழமை 11.05 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் கத்திக்குத்தில் காயமடைந்த இருவரை சாங்கி பொது மருத்துவமனைக்கும் ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கும் அழைத்துசென்றதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
“தாக்குதலின்போது ஏற்பட்ட காயங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபவ மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” எனக் காவல்துறை கூறியது.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு டிசம்பர் 12ஆம் தேதி சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.