ஹவ்காங் காவல்துறையின் காணொளிக்கு பெரும் வரவேற்பு

ஹவ்காங் காவல்துறையின் காணொளிக்கு பெரும் வரவேற்பு

2 mins read
7ed494c7-38e8-45c9-a893-e6947ba562a9
ஹவ்காங் காவல்துறை வெளியிட்ட ‘கண்ணால் பார்ப்பதை நம்பாதீர்கள்’ காணொளிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. - படம்: ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் நிலையம்

ஹவ்காங் காவலர்கள் வெளியிட்டுள்ள மோசடித் தடுப்பு காணொளிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் நிலையத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளி, 2.8 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்ததோடு 110,000 விருப்பங்களையும் 1,500க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

அதில் ஒரு கோப்பையை கையில் பிடித்துள்ள அதிகாரி ஒருவர், “நான் என்ன குடிக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா,” என்று கேட்டு கோப்பையில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறார்.

பின்னர், கோப்பையை உண்மையிலேயே தனது கையால் பிடித்திருக்கவில்லை என்பதை ஏஎஸ்பி பெஞ்சமின் சியா எனும் அந்த அதிகாரி தனது கைகளைக் காட்டுகிறார்.

“நான் உங்களிடம் பேசுவதாக நினைக்கிறீர்கள். ஆனால் அந்தக் குரல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கைப்பேசியிலிருந்து வருகிறது,” என்று கூறி அவர் கைப்பேசியைக் காட்டுகிறார்.

இறுதிக் காட்சியில், “நீங்கள் இணையத்தில் காண்பதெல்லாம் உண்மை என நம்பி விடாதீர்கள், ஏனெனில் நீங்கள் என்னைக் காண்பதும் உண்மையல்ல, அது கண்ணாடி,” என்று ஏஎஸ்பி சியா கூறுகிறார்.

கண்ணாடியின் மறுபக்கத்தில் அதிகாரி சியா இருப்பதையும் காணொளி காட்டுகிறது.

அந்தக் காணொளிக்கு, “நீங்கள் இணையத்தில் சந்திக்கும் நபர்கள் அவர்கள் காட்சியளிப்பதுபோல இருக்க மாட்டார்கள்,” என்று தலைப்பு இடப்பட்டிருந்தது.

இந்த வித்தியாசமான மோசடித் தடுப்பு செய்திக்கு வலைப்பதிவாளர்களின் பாராட்டுகள் குவிந்திருந்தன.

சிலர், 35 வயது அதிகாரியின் சிறப்பான தோற்றத்தைப் பற்றி கருத்து பதிவு செய்திருந்தனர்.

ஒருவர், என்னுடைய இதயம் திருடப்பட்டதை எப்படி புகார் செய்வது என்று நகைச்சுவையாகக் கேட்டிருந்தார்.

ஏஎஸ்பி சியா தனது தனிப்பட்ட இன்ஸ்டகிராம் பக்கத்தில் சூதாட்டத்தின் அபாயங்கள் உட்பட குற்றங்களுக்கு எதிராக எச்சரிக்கும் இதுபோன்ற பல காணொளிகளைப் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்