ஹவ்காங் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நிகழ்ந்த சாலை விபத்தில் மின்மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார். மின்மிதிவண்டி மீது கார் ஒன்று மோதியதாகவும் விபத்து நிகழ்ந்த பிறகு அந்த கார் நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விபத்து குறித்து 70 வயது கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.
ஹவ்காங் அவென்யூ 3க்கும் அப்பர் சிராங்கூன் சாலைக்கும் இடையில் உள்ள சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது குறித்து மாலை 6.40 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
சம்பந்தப்பட்ட மின்மிதிவண்டி சாலையைக் கடந்து போக்குவரத்து விளக்கு அருகில் காத்துக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலாண்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அப்போது திடீரென்று கார் ஒன்று அப்பகுதியை நோக்கி வேகமாகச் சென்றது.
சாலையோரத் தடுப்பு மீது ஏறிய கார், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பலகை ஒன்றின் மீது மோதியது.
இதில் அந்த மிதிவண்டி ஓட்டுநர் தூக்கி எறியப்பட்டார்.
சாலையில் விழுந்த அந்த 23 வயது ஆடவர் மீது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு வாகனங்கள் நல்ல வேளையாக மோதவில்லை. அவர் நூலிழையில் தப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய கார் சாலைத் தடுப்பில் இருந்த போக்குவரத்து விளக்கு மீது மோதி முடங்கியது.
இதற்கிடையே, காயமடைந்த மின்மிதிவண்டி ஓட்டுநர் தாமாகவே எழுந்து நின்று போக்குவரத்து விளக்கை நோக்கி நடந்து சென்றார். அவரது மின்மிதிவண்டி விபத்தில் நொறுங்கி கடுமையாகச் சேதமடைந்தது.
மிதிவண்டி ஓட்டுநருக்கு உதவ வழிப்போக்கர் ஒருவர் விரைந்தார்.
சில நிமிடங்கள் கழித்து, விபத்தை ஏற்படுத்திய கார் அவ்விடத்தைவிட்டு சென்றது.
மிதிவண்டி ஓட்டுநர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் அப்போது சுயநினைவுடன் இருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.