வீட்டுக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. எங்கு திரும்பினாலும் குப்பை.
பாலாம் ரோட்டின் புளோக் 19லிருந்து அடுக்குமாடி வீடு ஒன்றைக் ‘குப்பை வீடு’ என்று சுற்றியுள்ளவர்கள் அழைக்கின்றனர்.
அப்படி இருந்தும்கூட இரண்டு பேர் இங்கு வாடகை கட்டி தங்குகின்றனர் என்று அக்கம்பக்கத்தார், ஷின் மின் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
குறிப்பாக, வீட்டிலிருந்து வீசும் கடுமையான துர்நாற்றம், அண்டை வீட்டாருக்குப் பெரும் தொல்லையாக மாறியுள்ளது.
குடியிருப்புவாசி ஒருவர், அந்த வீட்டின் நிலைமையை ‘குப்பை வீடு’ என்று வர்ணித்ததுடன், ‘செத்த எலிகளின் நாற்றம் நாளுக்கு நாள் தாங்க முடியாத அளவுக்கு வீசுகிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் புளோக் 19க்குக் குடிபெயர்ந்த திருமதி லி, “நாங்கள் வெளியே செல்லும்போது அந்த வீட்டைக் கடந்து செல்லாமல் இருக்க முயற்சி செய்கிறோம்,” என்று தெரிவித்தார்
சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்ற ஷின் மின் செய்தியாளர்கள், தூரத்தில் லேசாகத் தொடங்கிய துர்நாற்றம், வீட்டை நெருங்கும்போது பலமாக வீசியதை உணர்ந்தனர்.
வீட்டின் வெளியே உள்ள பொது நடைபாதையில், மின்சார ஸ்கூட்டர்கள், நாற்காலிகள், அலமாரிகள் போன்ற பல்வேறு பொருள்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
வீட்டின் ஜன்னல்கள் வழியாகப் பார்க்கும்போது, அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஏறக்குறைய கூரை வரை குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
புளோக்கின் அதே மாடியில் வசிக்கும் 68 வயதான திரு லின், இந்தத் தொல்லை 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வதாகவும், வீட்டின் உரிமையாளர் அண்டை வீட்டாருடன் அதிகம் பழகுவதில்லை என்றும் கூறினார்.
வாத நோயால் அவதிப்படும் திரு லின், இந்தக் குப்பைக் குவியலால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து கவலை தெரிவித்தார். “என்னால் வேகமாக ஓட முடியாது. ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? இங்கே வயதானவர்களும் அதிகம் வாழ்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது,” என்றார் அவர்.
வீட்டின் உரிமையாளர் ஃபே லி நா, சில ஆண்டுகளுக்கு பெரிய வீடு ஒன்றிலிருந்து இங்கு குடிபெயர்ந்ததாகவும், தன் தடுப்பாற்றல் நோயால் (autoimmune disease) பாதிக்கப்பட்டிருப்பதால் பொருள்களை அகற்றுவதில் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வீட்டின் நிலைமை குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்த மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம், பொதுவான இடங்களில் உள்ள பொருள்களைக் குறைக்கும்படி குடியிருப்பாளர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு நிலைமை மேம்பட்டுள்ளதாக நகர மன்றம் தெரிவித்தது.
பொது இடங்கள் பாதுகாப்பாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும் நகர மன்றம் கூறியது.