தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடு புகுந்து கொள்ளை: குற்றம் சாட்டப்பட்டோர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

2 mins read
90b6d052-9b25-43f6-aaf0-d1116fbbe029
சீனாவைச் சேர்ந்த ஃபெங் யுன்லொங் (இடம்), ஸாங் யொங்சியாங் இருவரும் ஸெண்டெர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.  - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தரை வீடுகளில் திருடியதாகக் கூறப்படும் வெளிநாட்டினர் இருவர் மீது கதவை உடைத்துத் திருடியதன் தொடர்பில் தலா மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ரொக்கம், விலையுயர்ந்த பொருள்கள் என மொத்தம் $6,000க்கு அதிகமான பொருள்களைத் திருடியது தொடர்பான குற்றச்சாட்டுகள் அவை.

சீனாவைச் சேர்ந்த ஃபெங் யுன்லொங், 38, ஸாங் யொங்சியாங், 52, இருவரும் டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாயினர்.

அவர்கள் டிசம்பர் 18ஆம் தேதி மாலை 4 மணியளவில், பாசிர் பாஞ்சாங் ரோட்டுக்கு அருகே அமைந்திருக்கும் ஸெண்டெர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

அந்த வீட்டிலிருந்து $5,000 மதிப்பிலான பணப்பையுடன் பல்வேறு நகைகளையும் அவர்கள் திருடியதாகக் கூறப்பட்டது.

அண்மைய குற்றச்சாட்டுகளையும் சேர்த்து அந்த ஆடவர்கள் இருவரும் வீடு புகுந்து திருடியதாகத் தலா இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

முன்னதாக, டிசம்பர் 20ஆம் தேதி அவர்கள் மீது அத்தகைய தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஹாலந்து ரோட்டுக்கு அருகே அமைந்துள்ள கிரீன்லீஃப் வியூவில் உள்ள வீட்டில் டிசம்பர் 16ஆம் தேதி இரவு 9 மணியளவில் அத்துமீறி நுழைந்து அவர்கள் இரண்டு கைக்கடிகாரங்களைத் திருடியதாகக் கூறப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ஏறக்குறைய $9,000 ஆகும்.

இருவரும் டிசம்பர் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆடவர்களிடமிருந்து $8,800 மதிப்பிலான கைக்கடிகாரங்கள், $5,000 மதிப்பிலான பணப்பை, ஏறக்குறைய $3,570 ரொக்கம், பல்வேறு நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காவல்துறை டிசம்பர் 26ஆம் தேதி அவ்விருவரையும் கிரீன்லீஃப் வியூ வீட்டுக்கு அழைத்துச்சென்றது. அதன் அருகிலுள்ள கட்டுமானத் தளத்திலிருந்து ஸாங் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது ஃபெங் யாரும் வருகிறார்களா என்று கண்காணித்ததாக நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு மத்தியில் சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றக்கும்பல்களுடன் அவர்களுக்குத் தொடர்பிருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்று காவல்துறை கூறியது.

முன்னதாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்துலகக் குற்றல்கும்பல்களைச் சேர்ந்தோர் ஏறக்குறைய 10 வீடுகளில் புகுந்து $3.85 மில்லியன் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றதாகக் கூறப்பட்டது.

ஸாங், ஃபெங் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீடு புகுந்து திருடிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்