ஈசூனில் வீடு புகுந்து கொள்ளை; 22 வயது ஆடவர் கைது

ஈசூனில் வீடு புகுந்து கொள்ளை; 22 வயது ஆடவர் கைது

படம்: காவல்துறை

31 May 2026 - 4:20 pm

1 mins read

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளை அடித்ததாகக் கூறப்படும் 22 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறை சனிக்கிழமை (மே 30) கைது செய்தது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், புளோக் 225 ஈசூன் ஸ்திரீட் 21ல் வீடு புகுந்து சந்தேக நபர் ஒருவர் திருடியது குறித்து சனிக்கிழமை காலை 9.50 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.

அவ்வீட்டிலிருந்து $520 ரொக்கம், வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள், ஈசி-லிங்க் அட்டை ஆகியவை திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு, காவல்துறைச் செயல்பாட்டுத் தளபத்திய அதிகாரிகள், கண்காணிப்புக் கருவிக் காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டு, பின்னர் புளோக் 744 ஈசூன் ஸ்திரீட் 7க்கு அருகே அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து, திருடப்பட்ட வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள், ஈசி-லிங்க் அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், வீட்டுக் கதவைப் பலவந்தமாகத் திறக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இடுக்கி ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைதான ஆடவர்மீது ஜூன் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கொள்ளைகைதுகாவல்துறைஈசூன்