பெருவிரைவு ரயிலில் ஒரு பெண் மின்சிகரெட் புகைப்பது பதிவான காணொளி கடந்த மார்ச் மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையம் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறது.
காணொளியில் இடம்பெறும் 24 வயதுப் பெண்ணை அடையாளம் கண்டு மார்ச் 24ஆம் தேதி அவர் வீட்டைச் சோதனையிட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அறிக்கை மூலம் தெரிவித்தது. அவர் வீட்டில் ஒரு மின்செகரெட்டையும் மூன்று மின்சிகரெட் கருவிகளையும் கண்டெடுத்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
அந்த மின்சிகரெட் கருவிகளில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்தான இட்டோமிடேட் (etomidate) இருந்தது ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்தது. அந்த மருந்து, மருத்துவரின் கண்காணிப்பில்தான் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் சொன்னது.
சம்பந்தப்பட்ட பெண் இடம்பெறும் காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. அதில் அவர் தூக்கக் கலக்கத்துடன் காணப்படடார்.
ஒரு கட்டத்தில் அப்பெண் தலையைத் தொங்கவிட்டார், அவரின் தலைமுடி முன்னால் விழுந்தது. அவர் நடந்துகொண்ட விதம் இயல்புக்கு மாறாக இருந்தது.
“பெருவிரைவு ரயிலில் இந்தப் பெண் அனைவருக்கும் தெரியும் விதத்தில் மின்சிகரெட்டைப் புகைத்தது வெளிப்படையாக சட்டத்தை மீறும் செயலாகும்,” என்று சுகாதார அறிவியல் ஆணையம் சுட்டியது.

