எச்எஸ்பிசி வங்கியின் புதிய கடன் அட்டைகளுக்குத் தகுதிபெறும் வருடாந்தரச் சம்பளம் 30,000 வெள்ளியிலிருந்து 65,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி வங்கிகள், தங்கள் கடன் அட்டைத் தகுதிச் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அவ்வங்கிகளின் கடன் அட்டைகளுக்குத் தகுதிபெற வருடாந்தர சம்பளம் தொடர்ந்து 30,000 வெள்ளியாக இருக்கும்.
சிங்கப்பூரில் செயல்பட வெளிநாட்டு வங்கிகளான எச்எஸ்பிசி, சிட்டிபாங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகியவை உரிமம் பெற்றுள்ளன. அதன்படி அவை, செயல்பாட்டில் இருக்கும் மூன்று உள்ளூர் வங்கிகள் வழங்கும் பல்வேறு சேவைகளை வழங்க முடியும்.
அதிக பண வசதி உள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி அவர்களுடன் நிதி சார்ந்த உறவை வலுப்படுத்துவது எசஎஸ்பிசியின் இலக்கு. அதற்கேற்றவாறு கடன் அட்டைத் தகுதித் தொகையை உயர்த்தியிருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதிதாக எஸ்எஸ்பிசி கடன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்போரின் வருடாந்தர சம்பளம் இனி குறைந்தது 65,000 வெள்ளியாக இருக்கவேண்டும். தற்போது எச்எஸ்பிசி வாடிக்கையாளர்களாக இருக்கும் வெளிநாட்டவருக்கும் இது பொருந்தும்.
எச்எஸ்பிசி கணக்குகளில் சேகரித்துள்ள தொகை, அவ்வங்கியில் முதலீடு செய்த தொகை, அதன் காப்புறுதித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் குறைந்தது 50,000 வெள்ளி சேமித்து வைத்துள்ள சிங்கப்பூர்வாசிகள் மட்டும் கடன் அட்டைத் தகுதித் தொகைக்கு விதிவிலக்கு.