எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் தனது காப்புறுதித் தொழிலை உத்திசார்ந்த மறுஆய்விற்கு உட்படுத்தியுள்ளது.
அனைத்துலக அளவில் அக்குழு நடைமுறைகளை எளிமையாக்கிவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த மறுஆய்வு இடம்பெறுகிறது.
அந்த மறுஆய்வானது எச்எஸ்பிசி லைஃப் சிங்கப்பூரையும் உள்ளடக்கும் என்றும் காப்புறுதித் தொழில் சார்ந்து எல்லாத் தெரிவுகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அவ்வங்கிக் குழுமம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் தங்களுக்கு ஒரு முன்னுரிமைச் சந்தையாக விளங்குகிறது என்றும் இங்குள்ள வாடிக்கையாளர்களுக்குக் காப்புறுதிச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவோம் என்றும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட எச்எஸ்பிசி குழுமம் தெரிவித்திருக்கிறது.
சிங்கப்பூரில் ஓர் அனைத்துலகச் சொத்து நடுவத்தைக் கட்டமைக்கும் நோக்கிலும் தென்கிழக்காசியாவில் தனது விரிவாக்கத்தை முடுக்கிவிடும் நோக்கிலும் எச்எஸ்பிசி குழுமம் நான்கு ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூரில் ஏஎக்ஸ்ஏ காப்புறுதியை வாங்கியது. அப்போது திரு நோயல் குவின் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
இந்நிலையில், 2024ல் திரு ஜார்ஜஸ் எல்ஹெடரி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்றபின், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு நிறுவனத்தில் பெருமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. நிர்வாகம் சீரமைக்கப்பட்டு வருவதோடு ஆயிரக்கணக்கான வேலைகளும் குறைக்கப்பட்டன.
அதே நேரத்தில், எச்எஸ்பிசி வங்கியின் ஆகப் பெரிய சந்தையான ஹாங்காங்கில் அது தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறது.

