சேவைத் தடையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டார்ஹப் இணைய, தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக அந்நிறுவனம் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று அறிவித்தது.
பிரச்சினையைச் சரிசெய்ய தனது ஊழியர்கள் மிகக் கடுமையாக உழைத்ததாக ஸ்டார்ஹப் நிறுவனம் கூறியது.
இணைப்புப் பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்நோக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் ரவுட்டரை அடைத்துவிட்டு மீண்டும் இயக்குமாறு அது கேட்டுக்கொண்டது.
தேவைப்பட்டால் செட்-அப் பெட்டியையும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று ஸ்டார்ஹப் கூறியது.
“நிலையான, நம்பகமான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். கூடுதல் உதவி வழங்க எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழு தயாராக உள்ளது.வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் பொறுமை, புரிந்துணர்வுக்கு நன்றி,” என்று ஸ்டார்ஹப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை , சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்கள் இணையம், தொலைக்காட்சி சேவைகள் தொடர்பான இணைப்புப் பிரச்சினையை எதிர்கொண்டனர்.
அதே நாள் இரவு 9 மணிக்குப் பிறகு சேவைத் தடை படிப்படியாக சரிசெய்யப்பட்டது.

