முப்பதாண்டு பழைமையான ஈசூன் விளையாட்டு மையத்தை பொலிவூட்டுவதற்கான சாத்தியங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரின் வடக்கு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
நகர மறுசீரமைப்பு ஆணையம், செயல்படுத்த இருக்கும் பொழுதுபோக்குப் பெருந்திட்டத்திற்கான நடமாட்டக் கண்காட்சியில் அண்மையில் காட்டிய மேம்பாட்டுத் திட்டங்களில் ஈசூன் விளையாட்டு மைய மறுமேம்பாடும் ஒன்று.
தீவு முழுவதும் சென்றுவரும் நடமாட்டக் கண்காட்சி ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை கேன்பரா பிளாசாவில் இடம்பெற்றது.
பரிசீலனையில் இருக்கும் மேம்பாட்டுச் சாத்தியமும் திட்டங்களின் விவரமும் அக்கண்காட்சியில் இடம்பெற்றது.
உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையம் அருகில் அமைய இருக்கும் ஒருங்கிணைந்த மேம்பாடும் அதில் ஒன்று. வருங்கால உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையம் முன்னைய ராயல் மலாயன் கப்பல் தளத்தின் நிர்வாகக் கட்டடத்துடன் இணைத்து கட்டப்பட உள்ளது.
பொழுதுபோக்குப் பெருந்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்காக ஆணையம் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி அந்தக் கண்காட்சி.
திரட்டப்படும் கருத்துகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் வரைவு பெருந்திட்டத்தில் சேர்க்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு மையத்தில் உள்ள வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக நகர மறுசீரமைப்பு ஆணையமும் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பும் ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறின.
கண்காட்சியில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் திட்டமிடல் நடைமுறையின்போது பரிசீலிக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.
ஈசூன் அவென்யூ1ல் கடந்த 1992ஆம் ஆண்டு திறக்கப்பட்டது ஈசூன் விளையாட்டு மையம். உள்விளையாட்டரங்கம், கட்டுடல் பயிற்சிக்கூடம், விளையாட்டுத் திடல், ஓடுதளம் ஆகியவற்றுடன் திறந்தவெளித் திடலையும் அது உள்ளடக்கியுள்ளது.
மேலும், திடலில் இருந்து ஏறக்குறைய 1.3 கிலோமீட்டர் தொலைவில், ஈசூன் அவென்யூ 3ல் அமைந்துள்ள ஈசூன் நீச்சல்குளமும் அந்த விளையாட்டு மையத்தைச் சேர்ந்ததுதான்.
ஆணையத்தின் பெருந்திட்டத்தின் அடிப்படையில், ஈசூன் அவென்யூ 1 நிலப்பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மையம் விரிவுபடுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கான அந்த 5.8 ஹெக்டர் பரப்பளவு நிலப்பகுதியின் மூன்றில் ஒரு பகுதியிலேயே விளையாட்டுத் திடலும் விளையாட்டு அரங்கமும் அமைந்து உள்ளன.
தற்போது அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குப் பயன்பட்டு வரும் விளையாட்டு மையம், வருங்காலத்தில் 10,000 வீடுகளுடன் அமைய இருக்கும் சென்சாரு வீடமைப்பு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கும் விளையாட்டு வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.