பாட்டாளிக் கட்சி நிர்வகிக்கும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் சம்பந்தப்பட்ட நீண்டகால வழக்கை நீதிமன்றத் தலையீடு இன்றி முடித்துக்கொள்ள அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
நகர மன்ற உறுப்பினர்கள் என்னும் கடமையில் இருந்து பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் மீறியதாக அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றமும் செங்காங் நகர மன்றமும் அவர்களின் மீது வழக்குத் தொடுத்து இருந்தன.
இதற்கிடையே, இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டு இருப்பதால் இழப்பீட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதாக அந்த நகர மன்றங்கள் தெரிவித்து உள்ளன.
அதேபோல, வழக்கிற்கு செலவிடப்பட்ட தொகையை அந்த இரு நகர மன்றங்கள் மற்றும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து பெறுவது என்னும் கோரிக்கையை தாங்கள் கைவிடுவதாக பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
செலவுகளை சம்பந்தப்பட்டவர்களே ஏற்பது என்று சமரசப் பேச்சில் முடிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக புதன்கிழமை (ஜூலை 24) அந்தத் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
கணக்குத் தணிக்கையாளர்கள் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்ததைக் கண்டுபிடித்து இருந்தனர்.
அப்போது பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம், துணை அமைப்புச் செயலாளர் கென்னத் ஃபூ, முன்னாள் தலைவர் லோ தியா கியாங், சுவா ஸி ஹான் ஆகியோர் அந்த நகர மன்றத்தின் உறுப்பினர்களாக இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஏழாண்டுகளுக்குப் பிறகு சமரசம் ஏற்பட்டு உள்ளது.