முதல் நிலை ஊழியர்களுக்கு உதவ $3.2 மில்லியன் நிதி

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் முதல்நிலை ஊழியர்களுக்கு உதவும் நோக்கில் ஏறத்தாழ $3.2 மில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளதாக சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று (பிப்ரவரி 29) தெரிவித்தார்.

‘நெஞ்சுர நிதி’ என்று அழைக்கப்படும் இந்த நிதி சார்ஸ் நோயை எதிர்கொண்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் அந்நோயால் பாதிப்படைந்தவர்களுக்கும் உதவ 2003ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் மருத்துவர்கள், தாதியர், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட அனைத்து முதல்நிலை ஊழியர்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. 

கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ளோருக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

லோயாங்கில் அரசாங்கத்துக்குச் சொந்தமான தனிமைப்படுத்தும் இடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் கிளப்பைப் பார்வையிட்ட திரு லீ இத்தகவல்களை வெளியிட்டார்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இறக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க இந்த நிதி இலக்கு கொண்டுள்ளது.

மாண்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி மானியங்கள் போன்றவை அந்த நிதி மூலம் வழங்கப்படலாம் என்று திரு லீ தெரிவித்தார். 

கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள தாமாகவே முன்வந்துள்ள தொண்டூழியர்களுக்கும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் நிதி மூலம் உதவி அளிக்கப்படும்.

நிதிக்கான விண்ணப்ப செயல்முறைகள் குறித்த விவரங்கள் அடுத்த மாதத்திலிருந்து சமூக உண்டியலின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
 
லோயாங் சிவில் சர்வீஸ் கிளப்புக்கு அமைச்சர் லீ இன்று சென்றபோது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளையும் ஊழியர்களையும் சந்தித்தார். 

அந்த இடத்தில் 132 பேர் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், திரு லீ சென்றபோது அங்கு யாரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஆனால் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம்  வூஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட 266 சிங்கப்பூரர்களும் அவர்களது குடும்பத்தினரும் முன்பு அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

சிங்கப்பூரெங்கும் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய இடங்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் தனிமைப்படுத்தப்படலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது. 

நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் சாங்கி விடுமுறை விடுதி, வெளிப்புற நடவடிக்கை பள்ளி, பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் போன்ற இடங்களில் ஏறத்தாழ 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

#கொரோனா #சிங்கப்பூர் #உதவிநிதி