குடியேறிகளை ஒன்றிணைத்து நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும்: அதிபர் ஹலிமா

குடியேறிகளை ஒன்றிணைத்து நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும்: அதிபர் ஹலிமா

2 mins read
beffb76b-5974-4fcc-a00e-1470fdd2daa5
கொள்கை ஆய்வுக் கழகத்தின் 35ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் உரையாற்றினார். - படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல இன மக்களை ஒன்றிணைத்துப் பொதுவான தேசிய அடையாளத்தை உருவாக்க சிங்கப்பூர் இடைவிடாது முயற்சி மேற்கொண்டுவருகிறது. ஆனால் தற்போதுள்ள கட்டமைப்பு இன்னும் அதற்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதைச் சோதித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

கொள்கை ஆய்வுக் கழகத்தின் 35ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி திங்கள்கிழமை செயின்ட் ரெஜிசில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூருக்குப் புதிதாக வருவோரில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்களுடன் நட்பாகப் பழகுவது அவசியம் என்று கருதுவதில்லை. அவர்கள் தங்களின் சொந்த சமூக வட்டங்களில் பழகுவதையே விரும்புகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய அம்சம் என்று அதிபர் கூறினார்.

பல்லின சமூகத்திற்கு ஏற்படும் நுட்பமான அச்சுறுத்தல்கள் குறித்து சிங்கப்பூர் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் காலப்போக்கில் நாட்டின் ஒற்றுமையும் நிலைத்தன்மையும் அதனால் பாதிக்கப்படக்கூடும் என்று திருவாட்டி ஹலிமா எச்சரித்தார்.

“சிங்கப்பூரில் புதிதாகக் குடியேறுபவர்கள் அவர்களின் நிபுணத்துவம், திறன்கள் மூலம் பங்களிக்கின்றனர். சிங்கப்பூர் பொருளாதார ரீதியில் போட்டித்திறன்மிக்க நாடாக விளங்க அது உதவுகிறது. இருப்பினும் அவர்கள் இந்தச் சிறிய தீவில் உள்ளூர் மக்களுடன் சமூக ரீதியாக ஒருங்கிணைந்து வாழ்வது மிகவும் முக்கியம்,” என்று அதிபர் சொன்னார்.

சிங்கப்பூர் சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்று அவர்கள் உணர வேண்டும் என்று கூறிய அவர், சிங்கப்பூரில் வேறுபட்ட சமூக மக்களை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைந்து வாழும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதைச் சுட்டினார்.

இதன் தொடர்பில் நாம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வெளிநாட்டுத் திறனாளர்கள் இங்குள்ள விதிகளைச் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை என்ற உணர்வு சிங்கப்பூரர்களிடையே மோசமடையக்கூடும் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

“சிங்கப்பூரின் ஆரம்பகாலத்தில் அனைத்து இன, சமய மக்களும் ஒற்றுமையாக, வேறுபாடுகளைக் களைந்து ஒற்றிணைந்து வாழ்ந்தனர். ஆனால் இன்று பல இன சமூகத்திற்குத் தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

“நிலைமை மோசமடைந்தால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். அதற்கு முன்னர் நாம் இதைச் சரிசெய்ய வேண்டும். நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். பள்ளிகள், பணியிடங்கள், சமூக இடங்களில் வெளிநாட்டுத் திறனாளர்கள் ஆக்ககரமாகச் செயல்பட நாம் உதவ வேண்டும்,” என்றார் அதிபர் ஹலிமா.

தமது உரையில் திறமைக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றியும் நிர்வாகத் திறன் பற்றியும் அதிபர் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்