கணக்காய்வுத் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள், சம்பளம்

செயற்கை நுண்ணறிவுக்காக ஊழியர்களைத் தயாராக்கும் நிறுவனங்கள்

கணக்காய்வுத் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள், சம்பளம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2026 - 2:27 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவு, கணக்காய்வாளரின் வேலையையும் அவர்களுக்குத் தேவையான திறன்களையும் மாற்றியமைத்து வரும் நிலையிலும், சிங்கப்பூரின் கணக்காய்வுத் துறை 2025 ஆம் ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், கணக்கெடுக்கப்பட்ட அனைத்துப் பணிநிலைகளிலும் இடைநிலை சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது.

கணக்காய்வு, பெருநிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் கணக்கியல் நிறுவனங்களின் கணக்கெடுப்பு 2026ன் படி, இத்துறையின் பணியாளர் எண்ணிக்கை 2024ல் இருந்த 21,783லிருந்து 2025ல் 22,362 ஆக (579 பதவிகள் அல்லது 2.7%) அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் வருவாய் 5.1% அதிகரித்து ஏறத்தாழ $3.7 பில்லியனை எட்டியுள்ளது.

கணக்கியல் நிறுவனங்கள் 1,200க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளன. இவற்றில் ஏறத்தாழ 80%  தணிக்கை, உத்தரவாத, வணிக ஆலோசனை சேவைகளில் உள்ளன.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பகுப்பாய்வுகளை மதிப்பிட்டு அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் வேலைகளுக்கு ஊழியர்களைத் தயார்படுத்தும் சவாலை நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வழக்கமான பணிகள் தானியக்க மயமாக்கப்படுவதால், பாரம்பரியமாக அத்தகைய வேலைகளின் மூலம் பெறப்படும் பகுப்பாய்வுத் திறனை இளம் கணக்காளர்கள் எவ்வாறு வளர்த்துக் கொள்வார்கள் என்பதை முதலாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ், நவம்பர் 11ல் மரினா பே சாண்ட்ஸ் மாநாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ‘சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ்’ மாநாட்டில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

கணக்குகளைச் சமநிலை (reconciliations) செய்வது முதல் வரைவுகளை உருவாக்குவது (first drafts) போன்றவை செயற்கை நுண்ணறிவு கையாளத் தொடங்கியுள்ள பணிகளாகும். ஆனால் இவை பாரம்பரியமாக இளம் ஊழியர்கள் தங்கள் தொழிலைக் கற்றுக்கொள்ளவும் உதவியுள்ளதாக என்று அவர் மேலும் கூறினார்.

“நிறுவனங்கள் இந்தப் பணிகளைத் தானியக்க மயமாக்கும்போது, ஏதாவது சரியாகத் தோன்றாதபோது அதை உணர்ந்துகொள்ளும் திறனை இளம் ஊழியர்கள் எவ்வாறு தொடர்ந்து வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி லாவ்.

சரியான முறையில் செய்யப்பட்டால், தானியக்க மயமாகும் காரணத்தால் தொடக்கநிலை வேலைகள் மிகவும் சுவாரசியமானதாக மாறக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இதன் மூலம் பட்டதாரிகள், செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் வழங்கும் முடிவுகளைக் கேள்வி கேட்பதிலும், கடினமான முடிவுகளில் மூத்த சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும், வாடிக்கையாளர்களை முன்கூட்டியே சந்திப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிட முடியும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்