தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்களுக்கான ‘மனித நூலகம்’

2 mins read
487d49d0-e827-49c5-9581-2f49aac3c3b0
நான்கு அங்கங்களில் பங்கேற்பாளர்கள் பேச்சாளர்களைத் தொடர் சுழல்முறைப் பாணியில் அணுகினர்.  - படம்: சுந்தர நடராஜ் 
multi-img1 of 2

வெளியுறவு விவகாரம், ஆசிரியர், மருத்துவம், தற்காப்பு, தொற்றுத் தடுப்பு, தகவல் தொடர்பு, அரசு நீதிமன்றங்கள், சிறைச் சேவை என அரசாங்கப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்கள், ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்’ எனும் நிகழ்ச்சியில் நூல்களாகத் திகழ்ந்து தங்களுடைய பணியிட அனுபவங்களையும் அறிவுரைகளையும் சுமார் 40 பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர். 

தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த போட்’ அரங்கில் நடைபெற்றது. 

அரசாங்கப் பணியின் தொடக்கம், அதற்கான நீண்ட நாள் அர்ப்பணிப்பு, ஏற்றத்தாழ்வுகள், அரசாங்கப் பணிக்கான தயார்ப்படுத்துதல் என்ற நான்கு அங்கங்களில் பங்கேற்பாளர்கள் பேச்சாளர்களைத் தொடர் சுழல்முறைப் பாணியில் (round robin style) அணுகினர். 

பேச்சாளர்களில் ஒருவரான சிங்கப்பூர் சிறைச் சேவையின் துணைக் கண்காணிப்பாளர் வேணு ஆர்ஷ், இளையர்களுடன் கலந்துரையாடிய அனுபவத்தைப் பகிர்ந்தார். 

“கலந்துகொண்ட இளையர்களிடம் மிகுந்த ஆர்வம் அவர்கள் கேட்கும் கேள்விகளில் தெரிந்தது. அவர்கள் தொடர்ந்து அதே ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார் அவர். 

இந்நிகழ்வுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்கள் வருகையளித்தது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து பேச்சாளர்களும் பங்கேற்பாளர்களும் கூடிக் கலந்துரையாடினர். இரவு உணவு அளிக்கப்பட்டது. 

அரசாங்கப் பணிகள் மூலம் சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி சிறந்த அனுபவங்களைப் பெறலாம் என்று ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் வாசு தாஸ் கூறினார்.

“ஓரிரு ஆண்டுகள் கடந்தும் அரசாங்க நிறுவனங்களில் இளையர்கள் நிலைக்க வேண்டும். அதன் முழுமையான அனுபவம் ஆழமான நோக்கத்துக்கு வழிவகுக்கிறது,” என்றார் திரு தினேஷ். 

இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்று கூறினார் தற்போது அடிப்படை ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் கிருத்திக் வேதாந்த் நாகப்பாண்டி, 18. 

“கல்வித் துறை மீது அதிக ஈர்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது,” என்றார். 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டக்கல்வி மேற்கொண்டு வரும் ஆர்ஃபா மாலிக், அரசாங்கப் பணிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நிகழ்ச்சிக்குத் தன் நண்பர்களுடன் வந்திருந்தார். 

“ஒவ்வொரு பேச்சாளருக்கும் ஒரே சமயத்தில் சுமார் 5 பங்கேற்பாளர்கள் இருந்தனர். சிறிய குழுக்கள் என்பதால் என்னால் பேச்சாளரிடம் அதிகம் உரையாட முடிந்தது,” என்றார் ஆர்ஃபா. 

குறிப்புச் சொற்கள்