செயற்கை நுண்ணறிவுக்கு (ஏஐ) எதிராக மனிதர்களை முன்னிறுத்துவதற்குப் பதிலாக மனிதர்கள் மேலும் நன்றாகச் செயல்பட்டு செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்து பணியாற்றும் வருங்காலத்தை மக்களுக்கு வடிவமைத்துத் தருவதே சிங்கப்பூரின் எண்ணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் திறனுக்கு மெருகூட்ட தனிநபர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மனிதர்களின் சார்பில் செயற்கை நுண்ணறிவுக் குழுக்கள் அவர்களின் பணிகளை மேற்கொள்வதில் இப்போது கவனம் திரும்பியுள்ளதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார். அந்தாஸ் சிங்கப்பூர் ஹோட்டலில் வியாழக்கிழமை (ஜனவரி 29) நடந்த ‘என்டியுசி லர்னிங்ஹப் ஹியூமன்+ சிம்போசியம் 2026’ மாநாட்டில் திருமதி டியோ பேசினார்.
செயற்கை நுண்ணறிவுத் தளங்களால் சுயமாக முடிவெடுக்க முடியும் என்றும் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
“இயல்பாகவே மனிதர்களின் பங்களிப்பு உருவெடுக்கும்,” என்றார் திருமதி டியோ. எடுத்துக்காட்டாக இன்றைய மென்பொருள் பொறியாளர்கள் முன்பைப்போல் நீளமான கணினி நிரல் மொழியைத் தாங்களே எழுதுவதில்லை என்றும் ‘உத்தரவு’ மட்டும் தந்து செயற்கை நுண்ணறிவுத் தளங்களைத் தங்களின் வேலையைச் செய்ய வைக்கின்றனர் என்றும் அவர் சுட்டினார்.
மென்பொருள் மேம்பாட்டாளர்கள் ஒருவருடன் ஒருவரும் செயற்கை நுண்ணறிவுடனும் இணைந்து பணியாற்றக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் திருமதி டியோ.
“இது எப்போதும் சாத்தியப்படாமல் இருக்கலாம். ஆனால், நமது ஆற்றலுக்கு மெருகூட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும் என்ற மனப்போக்குடன் தொடங்கவேண்டும்; அது நமது இடத்தை எடுக்கும் என்ற எண்ணம் தேவையில்லை,” என்று திருமதி டியோ விவரித்தார். செயற்கை நுண்ணறிவில் துரிதமாக மேம்பாடுகள் செய்யப்பட்டுவரும் வேளையில் இந்த மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
“செயற்கை நுண்ணறிவுடன் ஒத்துழைப்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது அல்லது பரிச்சயப்படுத்திக்கொள்வதுதான் புதிய தேவையாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு முறைகளை இயக்குவது, அவை வெளிப்படுத்துபவற்றைப் புரிந்துகொள்வது, அவற்றின் ஆற்றலை நமது வேலையில் அங்கம் வகிக்கச் செய்வது ஆகியவை ஆகும்,” என்று திருமதி டியோ குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தொடர்புகொள்ளுதல், உணர்வுகள் சார்ந்த அறிவாற்றல் (emotional intelligence), ஆராய்ந்து சிந்தித்தல் (critical thinking) போன்ற அன்றாடச் செயல்பாடுகள் தொடர்பான திறன்களை வளர்த்துக்கொள்ள வர்த்தகத் தலைவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய தலைமைத்துவக் கழகத்தையும் அமைச்சர் டியோ நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) பயிற்சிக் கழகமான என்டியுசி லர்னிங்ஹப் அக்கழகத்தை நடத்துகிறது.

