டௌன்டவுன் ரயில் பாதையில் அமைந்துள்ள ஹியூம் பெருவிரைவு ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
பிற்பகல் 3 மணிக்கு நிலையம் திறக்கப்படவிருந்த நிலையில், கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு முன்பே அங்கு ஏறக்குறைய 40 பேர் திரண்டிருந்தனர்.
நேரம் நெருங்க நெருங்க அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த துணைக் காவல்துறைப் படையினர் அங்கு இருந்ததைக் காண முடிந்தது.
ஹில்வியூ, பியூட்டி வோர்ல்டு நிலையங்களுக்கு இடையே ஹியூம் எம்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது. டௌன்டவுன் ரயில் பாதை இரண்டாம் கட்டத்தின் கடைசி நிலையம் இதுதான்.
அப்பர் புக்கிட் தீமா சாலையை நோக்கியும் ஹியூம் அவென்யூவை நோக்கியும் அது இரு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.
இதன்மூலம், அவ்வட்டாரவாசிகள் நகர மையத்திற்குச் செல்வதற்கான பயண நேரம் குறையும்.
இனி, ஹியூம் நிலையத்திலிருந்து சென்ட்ரல் பொலிவார்டில் உள்ள டௌன்டவுன் நிலையத்திற்கு 30 நிமிடங்களில் சென்றுவிடலாம். முன்னர் அதற்கு 45 நிமிடங்கள் ஆனது.
அப்பகுதி குடியிருப்பாளர்கள் பூமலைக்குச் செல்ல முன்னர் பேருந்தை நாட வேண்டியிருந்த நிலையில், இனி 15 நிமிடங்களில் ரயிலில் அங்கு சென்றுவிடலாம்.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுலாத் தலங்களான முன்னாள் ஃபோர்டு தொழிற்சாலையும் புக்கிட் தீமா பசுமை ரயில் பாதையும் ஹியூம் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளன.
ஹியூம் நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, 220,000க்கும் அதிகமான குடும்பங்கள் பத்து நிமிடத்திற்குள் டௌன்டவுன் ரயில் பாதையில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு நிலையத்திற்கு நடந்து சென்றுவிடலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
டௌன்டவுன் ரயில் பாதையில் மேலும் நான்கு நிலையங்கள் கட்டப்படவுள்ளன. ஸிலின், சுங்கை பிடோக் நிலையங்கள் 2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படும். அந்த ரயில் பாதையை புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து வடமேற்கில் நீட்டித்து, புதிய சுங்கை காடுட் சந்திப்பு நிலையத்தை இணைக்கும் வகையில் மேலும் இரு நிலையங்கள் 2035க்குள் கட்டப்படும்.