ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஒலிவியா லம்மும் மற்ற ஐவரும் தங்கள் மீதான குற்றவியல் வழக்கில் சாட்சியமளிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அரசுத் தரப்பு அதன் சாட்சியங்களை முடித்துக்கொண்ட பிறகு, வழக்கில் போதிய ஆதாரமில்லை எனக் கூறி விடுவிக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அத்தகைய மனு என்பது, அரசுத் தரப்பிடம் தங்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அதனால் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைக்க அழைக்காமலேயே தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தற்காப்புத் தரப்பு கோருவதாகும்.
லம், முன்னாள் தலைமை நிதி அதிகாரி சோ வீ பெங், முன்னாள் சுயேச்சை இயக்குநர்களான தியோ கியாங் கொக், கே சீ சியோங், கிறிஸ்டஃபர் முருகாசு, லீ ஜூ ஹாய் ஆகியோருக்கு எதிராக அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது என்று முதன்மை மாவட்ட நீதிபதி தோ ஹான் லீ கண்டறிந்ததைத் தொடர்ந்து, அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லம்மின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங், தமது கட்சிக்காரர் இந்த விவகாரத்தைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அரசுத் தரப்பால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்பதையும் நிரூபிக்கவும் முடியாது என்பதையும் நம்புவதாகக் கூறினார்.
மேலும், “இறுதியில் பலனளிக்காத ஒரு நடைமுறைக்காக மனுக்களைக் கேட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க லம் விரும்பவில்லை,“ என்றும் அவர் தெரிவித்தார்.
