குழந்தைப் பருவத்தில் நன்கு அறிமுகமான மொழியாக விளங்கிய மலாய் மொழியை அப்போது முறையாகக் கற்காவிடினும் இப்போது விடாமுயற்சியுடன் அதனைக் கற்று வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தந்தையார் மலேசியாவின் ஈப்போவிலிருந்து வந்தவர்; தாயார் சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட், ஆம்பர் சாலைகளுக்கு இடையிலிருந்த, முன்னைய கம்போங் ஆம்பர் பகுதியைச் சேர்ந்தவர்.
பெற்றோர் இருவரும் தங்களுக்குள் அவ்வப்போது மலாய் மொழியில் பேசிக்கொள்வர் என்று தமது முதலாவது தேசிய தினப் பேரணி உரையின்போது திரு வோங் தெரிவித்தார்.
“இப்போது விடாமுயற்சியுடன் மலாய் கற்று வருகிறேன். என்னுடைய மலாய் மொழித்திறன் மேம்படும் என நம்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.
மலாய் கற்க தம்மை ஊக்குவித்து வருவோருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஹெய்க் ஆண்கள் பள்ளியிலும் தஞ்சோங் காத்தோங் உயர்நிலை தொழில்நுட்பப் பள்ளியிலும் படித்த காலத்தில் அவ்வப்போது தம்முடைய மலாய் நண்பர்களைச் சந்தித்து வந்ததைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
அந்த நண்பர்கள் வாழ்க்கையில் மேம்பாடு கண்டு, அவர்களின் பிள்ளைகளும் வளர்ந்துவிட்டதாக அவர் கூறினார்.
கடந்த பல்லாண்டுகாலமாக சிங்கப்பூர் வளர்ந்தபோது, மலாய் சமூகமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மலாய் இளையர்களிடையே, நன்கு படித்தவர்களையும் தங்கள் துறைகளில் சிறந்து விளங்குவோரையும் கண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.