விஷ்ருதா நந்தகுமார்
தாம் பணிக்குழு நபராக இருந்தாலும் பொங்கோலுக்கான பணிக்குழுவில் இருப்பதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை (மே 1) யூசோஃப் இஷாக் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் பிரசார கூட்டத்தில் பிரதமர், துணைப் பிரதமர், பிரதமர் அலுவலக அமைச்சர், மூத்த துணை அமைச்சர்கள் எனப் பெரும் தலைமைப் பட்டாளமே திரண்டு வாக்கு வேட்டையாடியது.
அப்போது பேசிய துணைப் பிரதமர் கான், “இன்றைய நிச்சயமற்ற உலகில், சிங்கப்பூரை யார் வழிநடத்துவார்? சிங்கப்பூரை பிரதிநிதித்து உலக மேடையில் திகழ வழிவகுக்கப்போவது யார்?” என்று கேள்வியெழுப்ப, அங்குக் கூடியிருந்த மசெக ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
தாம் 25 ஆண்டுகாலமாக அரசியல் களத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு கான், “நான் பணிக்குழு நபராக இருக்கலாம். ஆனால், நான் பொங்கோலுக்கான பணிக்குழுவில் இருக்கிறேன்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பொங்கோல் குடியிருப்பாளர்கள் அனுபவித்து மகிழும் பூங்காக்கள், கூரைத்தோட்டங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களும் சிங்கப்பூரின் மிகப் பெரிய பொது நூலகமும் பொங்கோலில் இருப்பதை அவர் சுட்டினார்.
பொங்கோல் குழுத்தொகுதியில் வெற்றிபெற்றால், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மசெக தொடர்ந்து பாடுபடும் என்று அவர் உறுதியளித்தார் .
புதிய பேருந்து நிலையம், ஆறு புதிய பேருந்துப் பாதைகள், சாங்கி, ஜூரோங் போன்ற இடங்களை பொங்கோல் மக்கள் எளிதாகச் சென்றடைய புதிய ரயில் பாதைகள் எனப் போக்குவரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாகப் பாதிக்கப்படுபவர்களையும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களையும் பாதுகாக்க SG60 பற்றுசீட்டுகளும் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
“நான் இத்தொகுதிக்கு வேண்டுமெனில் புதியவனாக இருக்கலாம். ஆனால், நெருக்கடிகள் எனக்கு புதிது அல்ல. சேவை செய்வதும் எனக்கு புதிதன்று. இப்போது நீங்களும் எனக்குப் புதியவர்கள் அல்லர். பொங்கோல் குடியிருப்பாளர்களின் கோரிக்கைகளையும் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி தொடர்ந்து போராடுவேன், உங்களுக்காகச் சேவையாற்றுவேன்,” என்று தமது உரையை ஆணித்தரமாக முடித்தார் துணைப் பிரதமர் கான்.
எதிர்மறை அரசியலைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்த நிலையில், மீண்டும் அக்கருத்தை வலியுறுத்தினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சரும் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி.
“மற்றவர்களைத் தாழ்த்தி, கடும் சொற்களால் சுட்டிக்காட்டி என்றும் மசெக பேசியதில்லை. மாறாக, அடுத்த ஐந்து ஆண்டுகளையும் தாண்டி, பொங்கோல் தொகுதிக்கான எதிர்காலத்தை முதன்மைப்படுத்தும் உண்மையான உறுதியான செயல்திட்டங்கள் எங்களிடம் உள்ளன,” என்று அவர் சொன்னார்.
மேலும், வேலைவாய்ப்பு, போக்குவரத்து, மூத்த குடிமக்களின் சிரமங்களையும் மசெக கருத்தில்கொண்டு மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் என்றும் டாக்டர் ஜனில் உறுதியளித்தார்.
இளைய தலைமுறைக்கு வேலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய மசெகவின் செயல்திட்டங்களைப் பொங்கோல் குழுத்தொகுதியில் போட்டியிடும் இயோ வான் லிங் பட்டியலிட்டார். வயது, பின்னணி போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொரு குடிமகனின் வேலைக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
அங்கு போட்டியிடும் இன்னொரு மசெக வேட்பாளரான துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இளம் குடும்பங்கள் தங்கள் கைக்குழந்தையை வளர்க்க அரசாங்கம் உதவும் என்றார்.
“மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுப்பது மட்டுமன்றி, செயல்திட்டங்களை எங்கள் கட்சி அமல்படுத்தும். குடியிருப்பாளர்களுக்காக நாங்கள் செயலில் இறங்குவதால்தான் நாங்கள் மக்கள் செயல் கட்சி,” என்றார் அவர்.

