பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கை வழிகாட்டியாகக் கருதியதுடன் அனைத்தும் அறிந்தவர், எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் பதில் உண்டு என்றும் தான் கருதியதாக அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் கூறியுள்ளார்.
அரசுத்தரப்பு துணை வழக்கறிஞர் சிவகுமார் ராமசாமி, அரசு நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது திருவாட்டி கான் இவ்வாறு கூறினார்.
2020ஆம் பொதுத்தேர்தல் அனுபவம் குறித்த கேள்விக்கு அது சுலபமான பயணம் அன்று என்று திருவாட்டி கான் பதிலளித்தார்.
என்ன எதிர்பார்ப்பது என்பது பற்றி எதுவும் தெரியாமலிருந்ததாகக் கூறிய திருவாட்டி கான், தனது பழைய சமூக ஊடகப் பதிவுகள் மீண்டும் கிளப்பிய சர்ச்சையைச் சமாளிப்பது கடினமாக இருந்ததாகக் கூறினார்.
அந்த இரண்டு பதிவுகள், முறையே 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியும் 2020ஆம் ஆண்டு மே 17ஆம் தேதியும் பதிவேற்றம் செய்யப்பட்டவை.
அப்பதிவுகள் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. மேலும், திருவாட்டி கானுக்கு அது கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
2020ல் செப்டம்பர் 17ஆம் தேதியன்று திருவாட்டி கான், அப்பதிவுகள் குறித்து மன்னிப்பு கேட்டார்.
நாடாளுமன்ற உரைக்கு முன்னரே பொய்யான கதை, கட்சித் தலைவர்களிடம் பகிரப்பட்டது
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வு நடந்த நாளில் திருவாட்டி கான், தாம் ஆற்றப்போகும் உரையின் அச்சுப்பிரதியைப் பிரித்தம் சிங்கிடம் பகிர்ந்ததாகக் கூறினார்.
அந்த உரையில் பாலியல் வன்முறை பற்றிய தமது கதை இடம்பெற்ற பகுதியைச் சிங் வட்டமிட்டு, அதற்கான ஆதாரங்களை நல்கும்படி தன்னிடம் கேட்டதாகத் திருவாட்டி கான் கூறினார்.
“சிங் கூறிய வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணரத் தவறியதால் நான் அந்த உரையை மாற்றவில்லை,” என்று திருவாட்டி கான் கூறினார்.
நாடாளுமன்ற அமர்வு நடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உரையைத் தயாரித்ததாகக் கூறிய திருவாட்டி கான், அந்தப் பொய்யான கதை தொடக்கத்தில் தனது உரையில் இல்லை என்று கூறினார்.
“என் எண்ணங்களை அப்படியே எழுதி, அதனை ஒட்டிய ஆய்வுகளைச் செய்திருந்தேன்,” என்று அவர் கூறினார்.
பாலியல் வன்முறைக் கதை சேர்க்கப்பட்ட தன் உரையை, ஆகஸ்ட் 3 நாடாளுமன்ற அமர்வுக்குச் சில நாள்களுக்கு முன்னதாகத் திரு சிங்குடனும் பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவர் ஃபைசல் மனாப்புடனும் பகிர்ந்ததாகத் திருவாட்டி கான் கூறினார்
பொய்யை ஒப்புக்கொள்வது ‘உன் முடிவு’ என்று பிரித்தம் சிங் கூறினார்
திருவாட்டி கான் பேசியதற்கு முன்னதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் திரு ஆங், 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியன்று நடைபெற்ற ஒழுங்குமுறை கூட்டத்தில் (disciplinary panel meeting) திருவாட்டி சில்வியா லிம் கைப்பட எழுதிய கடிதங்களை நீதிமன்றத்தில் படித்துக்காட்டினார்.
இத்தகைய ஒரு கூட்டம் திருவாட்டி ரயீசா கானுடன் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது.
அந்தக் குறிப்புகளின்படி, அக்டோபர் 4ஆம் தேதிக்கான நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பு, அந்தப் பொய் குறித்துத் தெளிவுப்படுத்துவது “அவரது (ரயீசா கான்) முடிவு,” என்று திரு சிங் அவரிடம் கூறியிருந்தார்.
அத்துடன், அந்தப் பொய்க்கு விளக்கமளிக்க வேண்டுமென்ற நினைவு தோன்றியதா என்று திரு சிங் ரயீசா கானிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த திருவாட்டி கான், அவ்வாறு செய்யத் தோன்றியது என்றும் ஆனால் அதனால் குற்ற உணர்வுக்கு ஆளானதாகவும் சொந்த அனுபவத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் திரு சிங்கிடம் கூறினார்.
கட்சியினர் தம்மைப் பதவி விலகச் சொன்னால் அவ்வாறு செய்யத் தயார் என்று கூறிய திருவாட்டி கான் அடுத்த நாள் பதவி விலகியதாகக் குறிப்பிட்டார்.