இணையத்தில் மூத்தோர் பாதுகாப்பாக இருப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பாட்டி

மூப்படைதல் குறித்த மேலும் சுவாரசிய செய்திகளுக்கு இன்ஸ்டாகிராமில் @ifeelyoungsg ஃபேஸ்புக்கில் I Feel Young SG பக்கங்களைப் பின்தொடருங்கள். 

திருவாட்டி ஈஷா அலி தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். 64 வயது ஆன போதிலும், அவர் பதின்ம வயதினரைப் போலவே ஃபேஸ்புக், டிக்டோக் போன்ற சமூக ஊடகத் தளங்களை எளிதாகப் பயன்படுத்துகிறார். காணொளி பதிவிடும் வகுப்புகளை நடத்தும் அவர் ‘சாட்ஜிபிடி’ போன்ற ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் அண்மைய தகவல்களைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.

மின்னிலக்க உலகில் செயல்படுவது குறித்து நன்கு அறிந்திருந்தாலும், அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோசடி வலையில் சிக்குவதை நுணியளவில் தவிர்த்தார்.

“குடிநுழைவு அதிகாரி என அடையாளம் கண்டுகொண்ட ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. மறுமுனையில் பேசிய அதிகாரி, எனக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சல் குடிநுழைவு அலுவலகத்தில் சிக்கிக்கொண்டு இருப்பதாகக் கூறினார். ஒரு குறிப்பிட்டத் தொகையை நான் செலுத்தினால், நான் அந்தப் பார்சலைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், என்னுடன் பேசிய நபர் பேரம் பேசத் தொடங்கியபோது, இதுபோன்ற விஷயங்களின் கட்டணங்களுக்கு ஒருவர் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்ற ஐயம் என்னுள் எழுந்தது. அப்போதுதான் இது ஒரு மோசடி என்பதை நான் உணர்ந்தேன்.

மோசடிகள் இப்போது அதிகமாக இருப்பதால், திருவாட்டி ஈஷா மற்றவர்கள் மோசடிகளில் சிக்காமலிருக்கத் தனது பங்கை ஆற்ற முடிவு செய்தார். 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட காவல்துறை – ஆர்.எஸ்.வி.பி. பிரேஸ் திட்டத்தில் அவர் சேர்ந்தார். மோசடி தடுப்பு ஈடுபாட்டைக் குறிக்கும் பிரேஸ் திட்டம், சிங்கப்பூர் காவல்துறை, அங் மோ கியோ பிரிவு மற்றும் மூத்த தன்னார்வத்திற்கான தேசிய சிறப்பு மையமான ஆர்.எஸ்.வி.பி. சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவம் ஆகும்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பே, திருவாட்டி ஈஷா ஆர்.எஸ்.வி.பி சிங்கப்பூருடன் தொண்டூழியராகச் சேர்ந்தார். ஆனால், 2022ஆம் ஆண்டிலிருந்துதான் அவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்த லாப நோக்கற்ற அமைப்பு மூத்தவர்களைத் தொண்டூழியம் செய்வதில் ஈடுபடுத்துகிறது. எஸ்.பி.எஃப். பிரேஸ் திட்டம் என்பது சமூகத்தை மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்காக சிங்கப்பூர் காவல்துறையுடனான கூட்டு முயற்சியாகும். 2023ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் மொத்தம் 650 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய 46,000க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

எவரும் மோசடிக்கு உள்ளாகலாம்

மோசடிகளுக்கு எதிரான பிரதிநிதியாகத் திகழும் திருவாட்டி ஈஷா காவல்துறையும் கூகள் நிறுவனமும் நடத்திய பயிற்சி வகுப்புகளின் மூலம் தன்னைப் புதுப்பித்துகொண்டே இருக்கிறார்.

காவல்துறையினரால் வழங்கப்பட்ட வளங்களைக் கொண்டும் தகவல்களை மூத்தோர் புரிந்துகொள்ளும் வண்ணம் அன்றாட வாழ்வில் நடக்கும் அம்சங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டும், இணையப் பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ள விரும்பும் பெரும்பாலும் மூத்தோர் கொண்ட 15 முதல் 50 பேர் உள்ளடக்கிய சிறிய குழுக்களுக்கு திருவாட்டி ஈஷா பள்ளிவாசல்கள், செயல்பாட்டு மையங்கள் மற்றும் சமூக நிலையங்கள் போன்ற இடங்களில் உரையாற்றியுள்ளார்.

பல மோசடிகள் நம்மைச் சுற்றி நிகழ்கின்றன என்றும் சில மோசடிகளால் அவர்களது வாழ்நாள் சேமிப்புகளை இழக்கக்கூடும் என்பதை உணர்த்துவதே இந்த உரைகளின் நோக்கங்களாகும். இந்த உரைகளுக்குத் தனது நேரத்தை வழங்கும் திருவாட்டி ஈஷா தமக்கும் விழிப்புடன் இருக்க அது நினைவூட்டுவதாகச் சொன்னார்.

“பலர் தாங்கள் ஒருபோதும் மோசடிகளுக்கு ஆளாகமாட்டோம் என்று நினைக்கிறார்கள். எவ்வளவுதான் தகவல் தொழில்நுட்ப ஆர்வலராக இருந்தாலும்கூட அவர்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“மூத்த தலைமுறையினர் பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் குறிவைக்கப்படுவதால் அவர்கள் அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்ப உலகில் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று திருவாட்டி ஈஷா கருத்துரைத்தார்.

“முன்பெல்லாம் மக்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் அதைக் கொடுக்க மாட்டீர்கள். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டால் நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மிக எளிதாக வழங்குகிறீர்கள். நீங்கள் பணத்தை நேருக்கு நேர் தராவிட்டாலும் இது பணத்தைக் கொடுப்பது போன்றதுதான்!,” என்று அறிவுறுத்தினார்.

இதனால்தான் தனது உரைகளின்போது ரகசிய தகவல்களை இணையம் அல்லது தொலைபேசி வாயிலாக உடனடியாகப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என்று மூத்தவர்களுக்கு அவர் எப்போதும் நினைவூட்டுகிறார்.

மேலும், அவர்கள் தங்கள் தொலைபேசி செய்திகளில் ஒரு இணைப்பைக் கண்டால், அதைச் சொடுக்கவோ அல்லது QR குறியீட்டை வருடவோ கூடாது என்று வலியுறுத்துகிறார்.

“நீங்கள் யாருக்கு பணம் செலுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். நன்கொடை வழங்குகிறீர்கள் என்றாலும் யாருக்கு, எதற்காக அதை வழங்குகிறோம் என்ற அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்வதே சிறந்தது,” என்று திருவாட்டி ஈஷா விளக்கினார்.

மூத்தோருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளைத் தரும் திருவாட்டி ஈஷா அலி. படம்: எஸ்பிஎச் மீடியா

வாழ்நாள் கற்றலும் தொண்டூழியமும்

திருவாட்டி ஈஷா தனது பள்ளி நாட்களிலிருந்து தொண்டூழியம் செய்து வருகிறார்.

நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான இவருக்கு, ஆறு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனது இளைய மகளை இழந்தார். இறந்த மகளின் மூன்று இளம் குழந்தைகளை திருவாட்டி ஈஷாதான் கவனித்து கொள்கிறார். அவர் சிரமப்பட்ட நேரத்தில் அப்பிள்ளைகள் அவருக்கு உதவியதைப் போலவே சமூகத்திற்கும் மீண்டும் பங்களிக்க விரும்பினார். மனம் இருந்தால் வழி பிறக்கும் என்பதை தனது பேரக்குழந்தைகளுக்குக் உணர்த்த அவர் விரும்பினார்.

“வாழ்க்கை அதன் சவால்களுடன் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் அதை எப்போதும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், வாழ்க்கை என்பது உங்களைப் பற்றியது அல்லது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால்தான் நான் வேலை செய்வதிலும் அவர்களைப் பராமரிப்பதிலும் இருக்கும்போதுகூட, சமூகத்துடன் ஈடுபட நேரம் ஒதுக்குகிறேன்,” என்று திருவாட்டி ஈஷா கூறினார்.

அவர் எப்போதும் தொண்டூழியத்தில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவதைக் கண்டு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகிறார்கள். இது அவரது சமூக வட்டத்தை விரிவுபடுத்தவும் அவரது அறிவையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

“வயதாகிவிட்டால் நான் ஒன்றும் செய்யாமல் வெறுமனே உட்கார வேண்டும் என்று அர்த்தமில்லை. நான் மேலும் படித்து அறிவைப் பெருக்க விரும்புகிறேன். இதனால், நான் அதிக திறன்களுடன் என்னைத் தயார்படுத்திக் கொண்டு அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

திருவாட்டி ஈஷா இரண்டு பட்டயக் கல்விச் சான்றிதழ்களும் வணிக நிர்வாகத்தில் பட்டக் கல்வியும் கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாட்டில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருந்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஆர்வம் கொண்டவர். நோய்ப் பரவல் காலத்தின் போது, அவர் தனது அனைத்து ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வரவுகளை தனது திறனை மேம்படுத்துவதற்கும் தனது கல்விக்கும் ஆர்வங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டார்.

தனது வயதில் இதைச் செய்ய அவருக்கு எவ்வாறு நேரமும் ஆற்றலும் கிடைக்கின்றது என்று கேட்டபோது, “உங்கள் நேரத்தை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்,” என்று அவர் கூறினார்.

தன்னைப் போன்ற மூத்தவர்கள் தொண்டூழியம் செய்வதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்றும் நேரத்தைச் சரியான வழியில் செலவிடுவதோடு சமூகத்திற்குத் தங்கள் பங்கையும் ஆற்ற முடிகிறது,” என்று அவர் மேலும் விளக்கினார்.

துடிப்புமிக்க மூப்படைதலை அரவணைத்தல்

உடலாலும் மனதாலும் சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமாக இருப்பதை ஊக்குவிக்கவும் உறுதியுடன் மூப்படையவும் அமைச்சுக் குழுவின் வெற்றிகரமான மூப்படைதலுக்கான 2023 செயல்திட்டம் “நான் இளமையாக இருக்கிறேன் எஸ்ஜி’ திட்டம் மூலம் மூப்படைதலை வருணிக்கிறது.

குடிமக்கள் மூன்று கருப்பொருள்களின்கீழ் தொடர்ந்து துடிப்புடன் இருக்க இந்தச் செயல்திட்டம் ஊக்குவிக்கிறது.

  • பராமரித்தல்: வருமுன் காக்கும் சுகாதாரப் பராமரிப்பு, துடிப்புமிக்க மூப்படைதல், பராமரிப்புச் சேவைகள் மூலம் உடல், மன நலனை மூத்தோர் ஆர்வத்துடன் பார்த்துக்கொள்ள ஊக்கமூட்டுதல்
  • பங்களித்தல்: கலந்துறவாடும் சமூகத்தைப் பேணும் பொருட்டு மூத்தோர் தங்களின் அறிவாற்றலையும் அனுபவத்தையும் தொடர்ந்து பகிர ஊக்கமூட்டுதல்
  • இணைந்திருத்தல்: அன்புக்குரியவர்களுடனும் நண்பர்களுடனும் சமுதாயத்தினருடனும் மூத்தோர் தொடர்ந்து இணைந்திருக்க ஆதரவளித்தல் 
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!