விலகாமல் செங்காங்கிற்காகத் தொடர்ந்து போராடுவேன்: லாம் பின் மின்

விலகாமல் செங்காங்கிற்காகத் தொடர்ந்து போராடுவேன்: லாம் பின் மின்

3 mins read
0bf19d09-2e37-4b8e-9de9-0b9006b4d43a
செங்காங் குழுத்தொகுதியை 2020ஆம் ஆண்டில் இழந்தது தன் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணங்களில் ஒன்று என்று அக்குழுத்தொகுதிக்கான மசெக வேட்பாளர் லாம் பின் மின் உணர்ச்சிபொங்கக் கூறினார்.  -  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங் குழுத்தொகுதியை 2020ஆம் ஆண்டில் இழந்தது தம் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணங்களில் ஒன்று என்று அந்தக் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் லாம் பின் மின் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்ட உரையின்போது உணர்ச்சி ததும்பிய நிலையில் அவர் அவ்வாறு கூறினார்.

குடியிருப்பாளர்களைக் கைவிட்ட ஓர் உணர்வாகத் தம் தோல்வியைக் கருதியதாகக் கூறிய திரு லாம், இருப்பினும் செங்காங் தொகுதி மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்புணர்ச்சியுடன் மீண்டும் களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

செங்காங் வட்டாரத் தொகுதி உலாவின்போது குடியிருப்பாளர்கள் பலர் தம்மை மீண்டும் வரவேற்றதாகவும், சிலர் அவரிடம் உதவியும் ஆலோசனையும் கேட்டதாகவும் அவர் கூறினார்.

“செங்காங்கிற்காகத் தொடர்ந்து போராடுவதற்கான நம்பிக்கையையும் துணிச்சலையும் ஒருபோதும் இழக்கவில்லை,” என்றார் திரு லாம்.

தம் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் செங்காங் குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த ஊக்கம் மீண்டும் போட்டியிடுவதற்கான உறுதியை வலுப்படுத்தியது என்று அவர் கூறினார்.

மேலும், வட்டாரத்தின் பராமரிப்புப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினார் திரு லாம்.

“யாரையும் குறைகூற நான் இங்கு வரவில்லை. ஆனால், உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது. தற்போதைய வட்டார நிர்வாகம் சரியானதன்று,” என்றார் அவர்.

தேர்தலில் வெற்றிபெற்றால் மசெகவின் செங்காங் குழு, வட்டாரப் பராமரிப்பின் உயர்தரத்தை மீட்டெடுப்பதை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் கருதும் என்று அவர் உறுதியளித்தார்.

மேடையில் இரண்டாவது வாய்ப்பு கோரிய திரு லாம், “நாம் அனைவரும் ஒன்றாகத் தொடங்கிய பணியைத் தொடர பணிவுடன் மீண்டும் ஒரு வாய்ப்பைக் கேட்கிறேன்,” என்று வேண்டிக்கொண்டு தம் உரையை முடித்தார்.

மசெகவின் செங்காங் குழுத்தொகுதி வேட்பாளர் அணி வியாழக்கிழமை (மே 1) நார்த் விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் பிரசாரக் கூட்டத்தை நடத்தியது. பிரசார ஓய்வுநாளுக்குமுன் நடந்தேறிய 11 பிரசாரக் கூட்டங்களில் இதுவும் ஒன்று.

கூட்டத்தில் செங்காங் குழுத்தொகுதி வேட்பாளர் அணியில் இடம்பெறும் பெர்னடெட் கியாம், தியோடோரா லாய், எல்மி நெக்மட் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.

உலக அளவில் இளையர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குதல், $2க்குக் காலைச் சிற்றுண்டிகள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறைகள் போன்ற கொள்கைகளை முன்வைத்தார் திருவாட்டி லாய்.

“நேர்மை, திறமை, அக்கறையுடன் வழிநடத்தும் அணிக்கு வாக்களியுங்கள்,” என்று மக்களை அவர் வலியுறுத்தினார்.

ஊடக எழுத்தறிவு மன்றம், ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ குழு ஆகியவற்றில் பெற்ற தமது தொழில்முறைப் பின்னணியைப் பயன்படுத்தி செங்காங் வட்டாரத்துக்கு வலுவான அரசாங்கக் கொள்கைகளை முன்வைப்பதாகவும் குடியிருப்பாளர்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த உதவுவதாகவும் திரு எல்மி கூறினார்.

“எதிர்ப்பதற்காகக் கொள்கைகளை விமர்சிக்காமல் அரசாங்கத் திட்டங்கள் உங்களுக்காகச் செயல்படுவதை உறுதிசெய்வேன்,” என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறந்த குழந்தை, முதியோர் பராமரிப்பு ஆதரவு, ஒற்றைத் தாய்மார்களுக்கு நீடித்த ஆதரவு ஆகியவற்றுக்காகப் போராடப்போவதாகத் தெரிவித்தார் புதுமுக வேட்பாளர் திருவாட்டி கியாம்.

“அழகான, குடியிருப்பாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய, துடிப்புமிக்க ஒரு செங்காங்கை உருவாக்குவோம்,” என்று அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்