இந்தியப் பாரம்பரிய பரதநாட்டிய நடனம், இசை ஆகியவற்றின்மேல் இருந்த ஈர்ப்பினால் நாடகத் துறையைத் தேர்ந்தெடுத்து, ‘ஐபி’ பாடத்திட்டத் தேர்வில் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவி உமா தேவி ஊர்மிளா.
நாடகத் துறையில் எந்தவிதப் பயிற்சியும் இல்லையென்றாலும் முகபாவனைகள், உடல்மொழி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் கதை சொல்ல முடியும் எனும் நம்பிக்கையில் அவர் இப்பாடத்திட்டத்தில் இணைந்தார்.
“நாடகத் துறைக்கும் மானுடவியல் பாடத்துக்கும் ஒருவிதத் தொடர்பு இருப்பதை உணர்ந்துள்ளேன். இரண்டு துறைகளும் ஓர் அண்டவெளியில் இயங்குவதன் மூலம் கதைசொல்லும் வழிமுறைகளை ஆராய்கின்றன. நாடகம், பொதுவாக மொழி, அசைவு ஆகியவற்றின்வழி வெளி உலகுடன் தொடர்புகொள்கிறது; மானுடவியல் துறை, கோட்பாடு, பகுப்பாய்வு ஆகியவற்றின்வழி தொடர்பு கொள்கிறது,” என்றார் உமாதேவி.
“இரு துறைகளும், சமூக, அரசியல் உண்மைகளைச் சொந்தக் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டுப் பல்வேறு கண்ணோட்டங்களை ஆராய்ந்து அணுகுகின்றன,” என்றும் அவர் சொன்னார்.
இப்பாடத்திட்டத்தில் பயின்றதன்மூலம் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் வேதியியல் துறையில் பயில்வதுடன் நிலைத்தன்மை, தொழில்நுட்பங்கள், வேதியியல் புத்தாக்கம் ஆகியவற்றில் ஈடுபட விழைகிறார் உமாதேவி.
‘ஐபி’ பாடத்திட்டத் தேர்வு முடிவுகள்
அனைத்துலக அளவில் கல்வியுடன் புத்தாக்கம், இணைப்பாட நடவடிக்கைகள், கலை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய பல்கலைக்கழகப் படிப்புக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் ‘ஐபி’ பாடத்திட்டத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.
சிங்கப்பூர்க் கலைப்பள்ளியைச் சேர்ந்த 167 பேர் இத்தேர்வில் பங்கேற்ற நிலையில், 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 38 அல்லது அதற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளனர். ‘ஐபி’ பட்டயக் கல்வி, ‘ஐபி’ வாழ்க்கைத்தொழில் தொடர்பான திட்டம் (IB Career-related Programme) ஆகிய இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் அடங்குவர்.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியிலிருந்து 28 மாணவ விளையாட்டாளர்கள் இத்தேர்வில் பங்கேற்ற நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 45 புள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 38 அல்லது அதற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இம்மாணவர்களில் 19 பேர், தேசிய அணியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இப்பள்ளி மாணவர்களில் ஐவர் நீட்டிக்கப்பட்ட ‘ஐபி’ வாழ்க்கைத்தொழில் தொடர்பான திட்டத்தில் பயின்றவர்கள்.
அல்ஜுனிட் அல்-இஸ்லாமியா மதரஸாவில், ‘அஸார் ஐபி’ பிரிவில் பயன்ற 15 மாணவர்கள் இருமொழிப் பட்டயம் பெற்று தேர்ச்சி பெற்றனர். இவ்வாண்டிறுதியில் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்குப்பின் அவர்கள் ‘அலியா’ பட்டயமும் (Aliyah Diploma) பெறுவார்கள்.
இவ்வாண்டு, அனைத்துலக அளவில் 157 பள்ளிகளிலிருந்து 23,392 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் ‘ஐபி’ எனப்படும் ‘இன்டர்நேஷனல் பக்கலோரே’ பட்டயக் கல்வித் திட்டத்தில் 2005ஆம் ஆண்டு இணைந்தது. அப்போது முதல், அனைத்துலக அளவில் 45 என்ற முழு மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களில் பாதிப் பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருந்து வருகின்றனர்.

