சிங்கப்பூரில் ‘ஐபி’ பாடத்திட்டத் தேர்வெழுதிய 2442 மாணவர்கள், டிசம்பர் 18ஆம் தேதி தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர். சிங்கப்பூர் மாணவர்கள் தொடர்ந்து இவ்வாண்டும் அனைத்துலக சராசரி மதிப்பெண்ணைக் காட்டிலும் சிறப்பாகச் செய்துள்ளனர்.
அனைத்துலக சராசரி மதிப்பெண்ணான 29.2ஐ சிங்கப்பூர் மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணான 38.4 மிஞ்சியுள்ளது.
உலக நாடுகளிலிருந்து இத்தேர்வை எழுதியவர்கள் 21,894 ஆவர். பட்டயம் தொடர்பான பாடத்திட்டம், வாழ்க்கைத்தொழில் தொடர்பான பாடத்திட்டம் என இரண்டு பிரிவுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
முந்தைய ஆண்டுகளில் ‘ஐபி’ தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், பல்கலைக்கழக விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி நாள் பொதுவாக டிசம்பரில் அமைவதால் ‘ஐபி’ தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியடப்பட்டுள்ளன.
அனைத்துலக அளவில் கல்வியுடன் புத்தாக்கம், இணைப்பாட நடவடிக்கைகள், கலை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய பல்கலைக்கழகப் படிப்புக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் ‘ஐபி’ பாடத்திட்டங்களை சிங்கப்பூரில் 22 பள்ளிகள் வழங்குகின்றன. சிங்கப்பூர் கலைப் பள்ளி (சோட்டா), ஆங்கிலோ-சீன தன்னாட்சிப் பள்ளி, சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையம் போன்ற பள்ளிகள் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் ‘ஐபி’ திட்டத்தில் 2005ஆம் ஆண்டு முதல் இணைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அனைத்துலக அளவில் 45 என்ற முழு மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களில் பாதிப் பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருந்து வருகின்றனர்.
சிங்கப்பூர் கலைப்பள்ளியைச் சேர்ந்த 159 மாணவர்கள் இவ்வாண்டு ‘ஐபி’ தேர்வு எழுதினர். அவர்களில் ஸ்ரீரஞ்சனியும் ஒருவர்.
‘இசை பல்லாண்டு காலம் வாழ வேண்டும்’
பாடங்கள் கடினமாக இருந்தாலும் அவற்றைத் தமக்குப் பிடித்த கலையுடன் இணைத்துப் படிப்பது அவற்றை எளிதாக்குவதாக 18 வயது ஸ்ரீரஞ்சனி முத்து சுப்ரமணியன் நம்புகிறார்.
நான்கு நரம்பு கொண்ட பாரம்பரியக் கருவியான ‘தம்புரா’ இசையை, ‘கால்குலஸ்’ எனும் நுண்கணிதத்துடன் இணைத்து அதன் பகுதி, பரிமாணங்களை ஆய்வு செய்யும் வகையிலான கட்டுரையைப் படைத்துள்ளார். இவர், மிருதங்கக் கலைஞரான தந்தை, இசைக் கலைஞர்களான தம் தாத்தா, பாட்டனார் வழியில் பெரும் இசைக்கலைஞராக வர வேண்டும் எனும் கனவுடன் உள்ளார்.
தொடக்கநிலை ஆறாம் வகுப்பை முடித்ததும் இசையைத் தமது முழுநேரத் தொழிலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக்கொள்ள எண்ணியதால், சிங்கப்பூர் கலைப் பள்ளியில் இணைந்தார்.
தொடர்ந்து, “வெறும் கர்நாடக இசையில் ஊறித்திளைத்த எனக்கு, மேற்கத்திய இசை, மலாய், சீனம் உள்ளிட்ட பிற இனங்களின் பாரம்பரிய இசை எனப் பலவற்றை அறிமுகம் செய்ததுடன் இசை குறித்த என் அறிவையும் பார்வையையும் விரிவுபடுத்தியுள்ளது இந்த ஆறு ஆண்டுப் பயணம்,” என்றார்.
“பல நூறு ஆண்டுகள் கடந்து வாழ்வது பாரம்பரிய கர்நாடக இசை. ஆனால், அதற்கான ரசிகர்கள் குறைந்துகொண்டே போவது வருத்தத்திற்குரியது,” என்று சொன்ன அவர், “பல இசை மேதைகளின் பங்களிப்பினால் இன்றும் இசை வாழ்கிறது. அதேபோல, இசையை இன்னும் பல்லாண்டுகள் கடந்து கொண்டுசெல்ல அதனை நவீனப்படுத்தி, புத்தாக்கத்தை வெளிக்கொணர்வதே என் இலக்கு,” என்றும் நம்பிக்கையுடன் சொன்னார் ஸ்ரீரஞ்சனி.

