வெப்பத்தைத் தணிக்க உதவும் மனிதவள அமைச்சின் முன்னோடித் திட்டம்

வெப்பத்தைத் தணிக்க உதவும் மனிதவள அமைச்சின் முன்னோடித் திட்டம்

2 mins read
326259c3-e3ec-472a-be60-7b2f9ff6b39b
படம்: மனிதவள அமைச்சு -

வெப்ப அழுத்தத்தையும் களைப்பையும் சமாளிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 200க்கும் மேற்பட்ட கட்டுமான ஊழியர்களுக்கு அவர்களின் பணி இடைவேளையின்போது சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பனிக்கட்டிக் கலவைகள் வழங்கப்பட்டன. சர்க்கரை சேர்க்கப்படாத அந்தப் பானம், ஊழியர்களுக்கு வினோதமாக இருந்தபோதும் விளைவு சாதகமாகத்தான் அமைந்தது.

சுட்டெரித்த சூரியனுக்குக் கீழ் கடினமாக வேலை பார்த்த நிலையில், அவர்களின் உடல் மைய வெப்பநிலையை அந்த பானம் குறைக்க உதவியது.

பனிக்கட்டிக் கலவை பானத்தைப் பருகியதால் அதிக வெப்பத்தை அவர்கள் உணரவில்லை. அத்துடன் தாகம் அதிகம் எடுக்காமல் வேலை செய்யக் கூடுதல் சக்தி இருந்ததைத் தாங்கள் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டனர். இதனால் வெப்ப அழுத்தம் அவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறைவு என்றார் மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகத்தின் இயக்குநர் திருவாட்டி எடலின் இங்.

வெப்பம் தொடர்பான நோய்களால் ஒருவருக்குக் காயங்கள் ஏற்படலாம். உற்பத்தித் திறனை அவர் இழக்கலாம், மரணத்திலும் அது முடிந்துவிடலாம்.

இத்தகைய வெப்ப அழுத்தத்திற்குப் பெரிதும் ஆளாகும் ஒரு பிரிவினர், கட்டுமான ஊழியர்கள். அவர்களைப் போலவே காற்றோட்டம் இல்லாத இடங்களில் உள்ள முதியவர்கள், வெளிப்புறத் துப்புரவாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் போன்றோரும் எளிதில் பாதிப்படையலாம்.

கட்டுமான ஊழியர்கள் வெப்பத்துக்கு எதிராகப் போராட, இந்தப் பனிக்கட்டிக் கலவை பானம் போன்ற தீர்வுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

பானத்துக்கான முன்னோட்டத்தை சிங்கப்பூர் குத்தகையாளர்கள் சங்கம், எஃப்&என் ஃபூட்ஸ், சிம்ப்லெக்ஸ், என்யுஎஸ் புரோஜெக்ட் ஹிட்சேஃப் ஆய்வாளர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.

நிழலுடன் கூடிய இடங்களில் இடைவேளை, சூரிய கதிர்களுக்கு எதிரான தன்மை கொண்ட புதிய ஊழியர்ச் சீருடைகள், ஊழியர்கள் தாய்மொழியில் வெப்ப அழுத்தம் குறித்து தகவல் அளித்தல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படலாம்.

குறிப்புச் சொற்கள்