புதுடெல்லி: ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்யும் முடிவை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் அரசாங்கங்கள், அரசியல் செல்வாக்குமிக்க தொழிலதிபர்களுக்குக் கடன் வழங்கப் பொதுத்துறை வங்கிகளைப் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கமே மறுமூலதனம், தொழில்முறை நிர்வாகத்தின் மூலம் இந்த வங்கியை மீட்டெடுத்தது என்றும் அவர் வாதிட்டார்.
ஐடிபிஐ வங்கியைக் கனடிய நிறுவனமான ஃபேர்ஃபாக்சுக்கு விற்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திரு ராகுல் காந்தி பேசிய மறுநாள் திருமதி நிர்மலா சீதாராமனின் கருத்து வந்துள்ளது.
லாபப் பாதைக்குத் திரும்பிய ஒரு வங்கியை விற்பதன் நியாயம் என்னவென்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, இடஒதுக்கீடு, இந்த நடவடிக்கைக்குப் பிறகு அரசாங்கத்தின் பங்கு குறைவது முதலியவை குறித்துக் கவலை தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு ‘எக்ஸ்’ தளத்தில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெருநிறுவனங்களுக்குக் கடன் வழங்குமாறு நிர்பந்திக்கப்பட்டதால், ஐடிபிஐ வங்கி மிகவும் மோசமான நிலையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.
தொழில்முறை நிர்வாகம், விவேகமான கடன் வழங்கும் நடைமுறைகள், ₹25,000 கோடிக்கும் அதிகமான மறுமூலதன நிதி ஆகியவற்றின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இந்த வங்கியை மீட்டெடுத்தது என்று அவர் கூறினார்.
“ஐடிபிஐ வங்கி தற்போது தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லத் தயாராக உள்ளது,“ என்று இந்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
