செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்திய ஆடவர் பாஸ்னாயக கீத் ஸ்பென்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
37 வயது பாஸ்னாயக, அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் முன்னதாகக் காணப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் அந்த தேவாலயத்துக்கு அடிக்கடி வருகை தருபவர் அல்ல என்று பக்தர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
மேலும், தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்தித் தாக்கியதற்காக ஏற்கெனவே 2019ஆம் ஆண்டில் பாஸ்னாயகவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சனிக்கிழமையன்று (நவம்பர் 9) 57 வயது பாதிரயிார் கிறிஸ்டஃபர் லீ தாக்கப்பட்டதையடுத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்ட காணொளியில் ரத்தக் கறை படிந்த வெள்ளை சட்டை அணிந்துகொண்டிருந்த தலையில் முடி இல்லாத ஆடவர் ஒருவர் தேவாலயத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. அந்த ஆடவரின் கைகள் அவரின் முதுக்குப் பின்னால் இருந்தன.
செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் அவசர செயற்குழுவைச் சேர்ந்த குறைந்தது முவர், ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. தேவாலயத்துக்கு வந்த சிலரின் பைகளை அவர்கள் சோதனையிட்டனர்.
பாதிரியார் லீயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்காணிக்க ஏதுவாக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செயின்ட் ஜேசஃப் தேவாலயம் :பேஸ்புக்கில் தெரிவித்தது.