மலேசியாவில் காட்டுத்தீ நீடித்தால் சிங்கப்பூரில் புகைமூட்டத்தை எதிர்பார்க்கலாம்

மலேசியாவில் காட்டுத்தீ நீடித்தால் சிங்கப்பூரில் புகைமூட்டத்தை எதிர்பார்க்கலாம்

1 mins read
5e6feb55-182f-46f2-86bc-8ebefe92e59a
வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) மாலை 6 மணி நிலவரப்படி 24 மணி நேரக் காற்றுத்தரக் குறியீடு 34-53 என்ற அளவில் நல்ல நிலைக்கும் மிதமான நிலைக்கும் இடைப்பட்டிருந்தது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேசியாவில் காட்டுத்தீ மேலும் தொடர்ந்தால் சிங்கப்பூரில் புகைமூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரை ஒட்டிய மலேசியப் பகுதிகளில் தீப்பரவல் அபாயமுள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்படுவதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாக வாரியம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) தெரிவித்தது.

“மலேசியாவில் காட்டுத்தீ தொடர்ந்து, வடக்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்று வீசினால் வானம் சிறிது புகைமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கலாம்,” என்று அது குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், வார இறுதியில் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் புகைமூட்டம் சற்று தணியலாம் என்றும் அது கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 24 மணி நேரக் காற்றுத்தரக் குறியீடு 34-53 என்ற அளவில் நல்ல நிலைக்கும் மிதமான நிலைக்கும் இடைப்பட்டிருந்தது.

காற்றுத்தரக் குறியீடு 50க்கும் கீழிறந்தால் காற்றின் தரம் நன்றாக உள்ளது எனப் பொருள். அது 51-100 என்ற வரம்பிற்குள் இருந்தால் காற்றின் தரம் மிதமான அளவில் இருப்பதாகக் கருதப்படும்.

மலேசியாவில் மூன்று இடங்களிலும் இந்தோனீசியாவின் ரியாவ் தீவில் ஐந்து இடங்களிலும் தீப்பரவல் அபாயம் இருப்பதை வாரியம் வெளியிட்ட நிலப்படம் காட்டியது.

ஜனவரி 26ஆம் தேதி சிங்கப்பூரின் சில இடங்களில் புகைநெடி வீசியதை அடுத்து, புகைமூட்ட நிலைமையைக் கண்காணித்து வருவதாக வாரியம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்