வரலாற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றலாம்: சிம் ஆன்

வரலாற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றலாம்: சிம் ஆன்

2 mins read
ddd7735c-fad7-4c67-b48b-97efab469bd9
உள்துறை, வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமைதிக்கும் செழிப்பிற்கும் ஜப்பான் பெரும்பங்காற்றுவதை சிங்கப்பூர் வரவேற்கிறது என்றும் எனினும் நிலுவையில் உள்ள வரலாற்றுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பொறுத்தே அது அமையும் என்றும் வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட சேதம், துயரங்களிலிருந்து உருவாகும் இந்த வரலாற்றுப் பிரச்சினைகள், ஆசியாவின் சில பகுதிகளைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. அவை உணர்வுபூர்வமாகக் கையாளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

உள்துறை மூத்த துணை அமைச்சருமான சிம் ஆன், வட்டார அளவிலான நம்பிக்கையை வலுப்படுத்த நல்லிணக்கத்திற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்ற சிங்கப்பூர்த் தலைவர்களின் நீண்டகாலக் கருத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்ற ‘சீனா சிறப்புப் பேச்சாளர்கள்’ நிகழ்வில் மாண்டரின் மொழியில் ஆற்றிய உரையில் இக்கருத்துகளை தெரிவித்தார் அவர்.

பிளவுற்று காணப்படும் உலகளாவிய ஒழுங்குமுறைகளுக்கு மத்தியில், சீனா, தென்கொரியா, ஜப்பானுடனான உறவுகளை ஆழப்படுத்துவதில் சிங்கப்பூரின் முயற்சிகளும் திருவாட்டி சிம்மின் உரையில் இடம்பெற்றிருந்தன.

ஆசிய பசிபிக் வட்டாரங்களில் அறிமுகப் பயணங்களை மேற்கொண்டுவரும் பிரதமர் லாரன்ஸ் வோங், மார்ச் மாத இறுதியில் ஜப்பானுக்குச் செல்வார் என்று குறிப்பிட்ட மூத்த துணை அமைச்சர், 2025ல் திரு வோங் சீனா, தென்கொரியாவுக்கு சென்றுவந்ததையும் நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வு சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்று சொன்ன திருவாட்டி ஆன், மின்னிலக்கப் பொருளியல், பசுமை மாற்றம், பாதுகாப்பு போன்ற துறைகளில் மேலும் சிறப்பான ஒத்துழைப்பை நாடு எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்