கட்டாயம் ஏற்பட்டால் நல்ல கொள்கைகள் உள்ள தரப்பையே தேர்ந்தெடுப்போம்: சான்

2 mins read
421ba95e-4899-4484-8260-36e1e209da07
‌ஷங்ரிலா கலந்துரையாடலில் பேசிய தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விரிசல்களுடன் காணப்படும் பாதுகாப்பு, பொருளியல் ஆகியவற்றால் தற்போதைய உலகச் சூழல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறிய நாடுகள் தங்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது அல்லது எந்தப் பக்கமாவது நிற்க வேண்டியது வருமோ ஆகிய கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

‌ஷங்ரிலா கலந்துரையாடலின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) பேசிய அவர், தென்சீனக் கடலில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடரும் பூசலையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

எந்தச் சூழலிலும் எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் குறிப்பிட்ட தரப்புகளின் பக்கம் நிற்பது ஆக்கபூர்வமாக இருக்காது என்பது சிங்கப்பூரின் கருத்து என்றார் அமைச்சர் சான். அதேவேளை, ஏதேனும் ஒரு தரப்பின் பக்கம் நின்றே தீரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிங்கப்பூர், நல்ல கொள்கைகளைக் கொண்ட தரப்பையே தேர்ந்தெடுக்கும் என்றும் திரு சான் குறிப்பிட்டார்.

அந்தக் கொள்கைகள், உலகப் பொருளியலை மேலும் ஒன்றிணைப்பவையாக இருக்கவேண்டும், அனைத்துலகச் சட்டங்கள், சுய ஆட்சி முறை, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு முறையை நிலைநாட்டுபவையாக இருக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.

“சக்திவாய்ந்தவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்துகொண்டு பலவீனமானவர்கள் துயரத்தை எதிர்கொள்ளும் காட்டுச் சட்டத்தைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளாத கொள்கைகளாக அவை இருக்கும்,” என்று திரு சான் விவரித்தார்.

“போருக்குப் போகாது வர்த்தகத்தின் மூலம் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பெரிய, சிறிய நாடுகள் என இருவகை நாடுகளுக்கும் சமமான, நியாயமான வாய்ப்பு இருக்கும் சூழல் நிலவவேண்டும்,” என்றும் அவர் சொன்னார். அந்த வகையில், எல்லாரது நன்மைக்காகவும் இருதரப்பு, பலதரப்பு, ஒரு குழுமத்துக்குள்ளே இருந்தபடி இணையும் பலதரப்புக் (plurilateral) கட்டமைப்புகளின் மூலம் ஒரே வகையான மனப்போக்கு கொண்ட பங்காளிகளுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

நடப்பில் இருக்கும், உலகளவில் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட எந்த பொருளியல், பாதுகாப்பு முறையும் தற்போதைய, வருங்கால சவால்களைக் கையாளவேண்டியவையாக இருக்க வேண்டும் என்றும் திரு சான் சுட்டினார்.

“வெளிப்படையாக இருப்பது, அனைவரையும் உள்ளடக்குவது ஆகியவை முக்கியம். சம்பந்தப்பட்ட எல்லோரிடையேயும், விதிமுறைகளை வரைய தங்களுக்குப் பங்குள்ளது என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம்,” என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்