‘ஒன்றுதிரள்வதற்காக’ (To Gather) எனும் கருப்பொருளில் மரினா பே, ராஃபிள்ஸ் பிளேஸ் வட்டாரங்களில் 17 ஒளி நிறுவல்களுடன், ‘ஐ லைட்ஸ் 2025’ களைகட்டவுள்ளது. மே 29ஆம் தேதி முதல் ஜூன் 21 வரை நடைபெறும் ‘ஐலைட்ஸ்’ முதன்முறையாக சவுத் பீச் வட்டாரம்வரை நீள்கிறது.
நகர மறுசீரமைப்பு ஆணையம், யுஓபி வங்கி உள்பட பல அமைப்புகளின் ஆதரவுடன் இந்த ‘ஐ லைட்ஸ்’ நிகழ்ச்சியினை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவருகிறது. மத்திய வர்த்தக வட்டாரத்தைக் கலை, நிலைத்தன்மையுடன் கூடிய ஒன்றிணைவுக்கான மையமாக மாற்றும் நோக்கில் இந்த ஒளித் திருவிழா நடைபெறுகிறது.
உள்ளூர் வெளிநாட்டுக் கலைஞர்களின் சிந்தனைகளில், பல்வேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் ஒன்றிணைந்து செயல்படுதலின் முக்கியத்துவத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் இந்நிறுவல்கள் பிரதிபலிக்கின்றன.
அவ்வட்டாரத்துக்குப் புத்துணர்வூட்டும் கண்கவர், கலைநயமிக்க ஒளி நிறுவல்கள், நிலைத்தன்மை குறித்த கலந்துரையாடல்களையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டுள்ளன.
நெதர்லாந்து நாட்டுக் கலைஞரின் சிந்தனையில், பெருந்தீயைக் குறிக்கும் வண்ணம் அமைந்துள்ள ஒளிப்படைப்பு பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கிறது.
மரினா பேயில் நிறுவப்பட்டுள்ள ‘சைன்’ எனும் அந்த ஒளிப்படைப்பு அழிவைக் குறிக்கும் தீ எவ்வாறு படைப்பாற்றலை உணர்த்த முடியும் என்பதையும் முடிவுகள் எவ்வாறு புதிய தொடக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
‘பிரிட்ஜ் ஆஃப் 1,000 ட்ரீம்ஸ்’ எனும் ஒளிப்படைப்பு 1,000 மூங்கில் கம்பங்களின் உதவியுடன் தனிப்பட்ட இலக்குகள் சமூகத்தின் சாத்தியங்களாக மாறுவதையும், சமூகம் அதை நோக்கி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் உணர்த்துகிறது.
வண்ணமயமான பூக்கள் நிறைந்த புல்வெளி போன்ற ஒளிப்படைப்பு, அதன் மத்தியில் நடந்து செல்லும்போது ஒளிவீசி, மெல்லிய இசையை எழுப்புகிறது. ஒருவர் சென்றால் மிதமான ஒளியெழுப்பும் அது, பலர் இணைந்து நடந்தால் அதிக ஒளியுடன், இனிய இசைக்கோப்பையும் இசைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அனைவரும் இணைந்து செயல்படுவது அழகியலை மெருகூட்டும் என்பதை இப்படைப்பு உணர்த்துகிறது.
இயற்கை குறித்த சிந்தனையைத் தூண்டும் கீழிருந்துமேல் செல்லும் அருவி போன்ற ஒளிப்படைப்பு, சிங்கப்பூர்த் தாவர விலங்கினங்களைக் குறிக்கும் ‘த கார்டியன்ஸ்’ எனப் பல்வேறு படைப்புகளும் நிகழ்ச்சிகளும் ஜூலை 22ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.