அரசு நீதிமன்றங்களில் வெளிப்புற தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிபுணராகச் சேவை வழங்கும்படி இணைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மடிக் கணினியில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்துள்ளார்.
அது, அனுமதி வழங்கப்படாத நபர் ஒருவர், வேறோர் இடத்திலிருந்து மடிக்கணினியை இயக்க வழியமைத்தது.
அதன் மூலம் அரசு நீதிமன்றங்களுக்குச் சொந்தமான 18,000க்கும் அதிகமான கோப்புகளின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், சம்பவத்தின்போது எந்தத் தகவலும் ஊடுருவப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) 42 வயது ஜனார்த்தனன் தமிழ் கோவனுக்கு 28 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தமது சொந்த கணினியின் திரை பழுதாயிருப்பதால் தகவல் பாதுகாப்பிற்கான தேர்வை அரசாங்கம் நிர்வகிக்கும் மடிக்கணினி வழி எழுத ஜனார்த்தனன் முற்பட்டபோது குற்றம் புரியப்பட்டது.
இந்திய நாட்டவரான அவர், 2017ஆம் ஆண்டு லெனோவோ பிசிசிடபிள்யூ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேவை விநியோக நிர்வாகியாகப் பணியமர்த்தப்பட்டார்.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் அரசு நீதிமன்றங்களில் வெளிப்புற சேவை வழங்குநராக இணைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, அங்கீகாரம் பெற்ற தகவல் பாதுகாப்பு நிர்வாகிக்கான தேர்வை மேற்கொள்ள ஜனார்த்தனன் மடிக்கணினியைப் பயன்படுத்தினார்.
ஆனால், அதில் உள்ள உரிய பாதுகாப்புச் சோதனைகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான ‘ஹரி பாலன்’ என்று அடையாளம் காணப்பட்ட நபரிடம் ஜனார்த்தனன் உதவி நாடினார்.
அப்போது வேறோர் இடத்திலிருந்து மடிக்கணினியை இயக்க வழியமைக்கும் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்யும்படி ஹரி பாலன் கூறினார்.
அதே போல செய்ததை அடுத்து இந்தியாவில் உள்ள இணைய இணைப்புடன் ஜனார்த்தனின் மடிக்கணினி இணைக்கப்பட்டது.
அச்சமயத்தில் ஹரி பாலன் பல்வேறு கோப்புகளை மடிக்கணினிக்கு அனுப்பினார்.
சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜனார்த்தனன் கைதுசெய்யப்பட்டார்.
