சட்டவிரோத நடவடிக்கை; அமெரிக்காவில் விசாரிக்கப்படும் சிங்கப்பூரர்

2 mins read
c6ec5160-d94f-4cae-b67e-e985089a66bc
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேவ் ஆனந்த் துரை. - படம்: த பிலிப்பீன் ஸ்டார்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரரான தேவ் ஆனந்த் துரையின் பெயரை அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் தேவ் ஆனந்த் சில சட்டவிரோத பங்குச் சந்தை வர்த்தகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அனைத்துலகக் குற்றக் கும்பலுக்கு நிதியை மாற்ற உதவியதாகவும் 39 வயதான தேவ் ஆனந்த்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சட்டவிரோத பங்குச் சந்தை வர்த்தகம்மூலம் 327,000 வெள்ளி ஈட்டியதாகத் தேவ் ஆனந்த் இன்னொருவரிடம் சொல்லியுள்ளார். அம்மனிதரும் விசாரணையில் உள்ளார்.

‘சிசி12’ என்று குறிப்பிடப்பட்ட அந்தச் சந்தேக நபர் சிங்கப்பூரில் வாழ்ந்தவர் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவரையும் சேர்த்து மொத்தம் 12 பேர் வழக்கு விசாரணையின்கீழ் உள்ளனர்.

தலைமறைவாக உள்ள தேவ் ஆனந்த், தேசியச் சிறுநீரக அறநிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.டி. துரையின் மகன் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தற்போது தேவ் ஆனந்த் ,தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார். சட்டவிரோத பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பில் அவரைக் கைது செய்ய மசாசூசெட்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நெவேடா நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட வர்த்தகக் குற்றச்சாட்டை எதிர்த்து வழக்குத்தொடுத்து வெற்றிபெற்றார் தேவ் ஆனந்த். அந்த வெற்றிமூலம் பெரிய நிதி ஒன்றையும் அவர் இழப்பீடாகப் பெற்றார்.

சிங்கப்பூரில் பல தொழில்களில் தேவ் ஆனந்த் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களின் இயக்குநராக அவர் உள்ளார். 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மென்பொருள் நிறுவனம் மற்றும் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேலாண்மை ஆலோசனை நிறுவனம் அவை ஆகும்.

தேவ் ஆனந்துடன் ஜி சி என்னும் 34 வயது சிங்கப்பூர் ஆடவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்