மலேசியாவில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்; தேசிய சேவையாளருக்கு அபராதம்

மலேசியாவில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்; தேசிய சேவையாளருக்கு அபராதம்

படம்: சாவ்பாவ்

06 Nov 2026 - 11:30 am

1 mins read

மலேசியாவில் சட்டவிரோதமான பந்தயத்தில் ஈடுபட்டதாகவும் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாகவும் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களில் முழுநேரத் தேசியச் சேவையாளரும் ஒருவர்.

தேசிய சேவையாளர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தாங்கள் செல்லும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமையன்று (நவம்பர் 5) வலியுறுத்தியுள்ளது.

ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) தேதி தனித்தனி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட மூவருக்கு மலேசிய நீதிமன்றம் அபராதம் விதித்ததாக ‘தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘மலாய் மெயில்’ ஆகிய மலேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய சேவையாளரான 19 வயது ஷாஜஹான் அல்பியான் அப்துல்லாவுடன் மலேசியாவைச் சேர்ந்தவர்களான 24 வயது முகம்மது டேனியல் ஹக்கீம் முகம்மது ரஷித், 18 வயது கொன்சாலேஸ் மெக்கோவிக் அனாக் ஜார்ஜ் ஆகியோருக்கு தலா 3,500 ரிங்கிட் (S$1,100) அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், அவர்கள் மூவரும் தங்கள் அபராதத்தைச் செலுத்திவிட்டனர்.

சயாஜஹான் அல்பியான், இச்சம்பவம் நடந்த சமயத்தில் தமது சொந்தப் பயணமாகவே மலேசியாவுக்குச் சென்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்